காவி உடையணிந்த அனைவரையும் பௌத்த பிக்குகளாக கருதப்பட முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
காலி மாபலகமவில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ள அவர் காவி உடையணிந்த அனைவரையும் தாம் பௌத்த பிக்குகள் என அழைப்பதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இனவாதத்தை, மதவாதத்தை தூண்டும் நபர்களை வணக்கத்திற்குரிய பௌத்த பிக்குகள் என அழைக்க முடியாது எனவும் காவி உடை அணிந்து துறவு கொண்டால் அந்த ஒழுக்க நெறிமுறைகளை பின்பற்ற வேண்டுமே தவிர குரோத உணர்வுகளைத் தூண்டக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காவி உடையணிந்த சிலர் கொலை செய்யவும் பொறாமை கொள்ளவும், குரோதத்தை பரப்பவும் எமக்கு கற்றுக் கொடுப்பதாகவும் அவ்வாறானவர்கள் எவ்வாறு கௌதம புத்தரின் போதனைகளை போதிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ள அவர் யாழ்ப்பாணத்தில் இவ்வாறான கடும்போக்காளர்கள் இருந்தார்கள் எனவும் இதனால் தமிழ் மக்கள் அழிவுகளை எதிர்நோக்க நேரிட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.