தேசியப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் கபில ஹெந்தவிதாரணவிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்த உள்ளனர். இன்றைய தினம் இந்த விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகளில் முன்னிலையாகுமாறு கபில ஹெந்தாவிதாரணவிற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் இயங்கி வரும் கேபிள் தொலைக்காட்சி சேவையொன்றிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டதாக, கபில மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனம் மற்றும் சில நிறுவனங்களிடமிருந்து பல மில்லியன் ரூபா பணத்தைப் பெற்றுக் கொண்டு அவற்றை தமது சொந்த வங்கிக் கணக்கில் வைப்பு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற கடத்தல்கள், கொலைகள் உள்ளிட்டன தொடர்பிலும் ஹெந்தவிதாரண மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.