குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
போர்த்துக்கலில் இடம்பெற்ற காட்டுத் தீ விபத்தில் 62 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அந்த நாட்டில் இடம்பெற்ற மிக மோசமான காட்டுத் தீ விபத்து இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த பாரிய அனர்த்தம் காரணமாக போர்த்துக்கல் நாட்டில் மூன்று நாட்கள் தேசிய துக்க தினமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் சிறுவர் சிறுமியரும் உள்ளடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நூற்றுக் கணக்கான தீயணைப்புப் படையினர் பல வழிகளில் தீயைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நாட்டில் அண்மையில் இடம்பெற்ற மிகப் பெரிய துயரச் சம்பவம் இதுவென பிரதமர் அன்டனியோ கொஸ்டா தெரிவித்துள்ளார்.
காட்டுத் தீ விபத்தில் எட்டு தீயணைப்புப் படைவீரர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர்வடையக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.