குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாண சபை குழப்பம் தொடர்பில் தீர்வுக்கான நம்பிக்கை ஒளிக்கீற்று தெரிவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் வாசஸ்தலத்தில் இன்று இரவு முதலமைச்சரை கூட்டமைப்பின் பங்காளி கட்சி தலைவர்களான புளெட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் , ரெலோ அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
அக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தனர்.
குறித்த குழுவினர் நேற்றைய தினமும் முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினர்.அதன் பின்னரே கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனின் கடிதத்திற்கு முதலமைச்சர் பதில் கடிதம் அனுப்பி இருந்தார்.
அந்நிலையில் இன்றைய தினம் சம்பந்தன் நேற்றைய தினம் முதலமைச்சர் அனுப்பிய கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்பி இருந்தார். இந்நிலையிலையே மீண்டும் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் முதலமைச்சருடன் சந்திப்பில் ஈடுபட்டனர். என்பது குறிப்பிடத்தக்கது.