குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
அரசாங்கம் இனக் கலவரத்தை தூண்ட முயற்சிக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டில் மீளவும் இனக் கலவரமொன்றை ஏற்படுத்தும் நோக்கில் அரசாங்கம் சூழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டில் தற்போது இன முரண்பாட்டு சம்பவங்கள் இடம்பெறவில்லை எனவும், சில இடங்களில பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான தாக்குதல்கள் இனக் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்திலும் பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரரைக் கொண்டு அலுத்கம பிரதேசத்தில் கலவரம் ஏற்படுத்தப்பட்டது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்ட அடிப்படையில் இவ்வாறான கலவரங்களையும் போராட்டங்களையும் சதித் திட்டங்களின் மூலம் அரங்கேற்றி வருவதாக குற்றம் சுமத்தியுள்ள அவர் நாட்டில் மிகச் சிறந்த ஓர் சூழ்ச்சிகாரராக சம்பிக்க ரணவக்கவை குறிப்பிட முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஞானசார தேரரை போட்டியிடச் செய்யவும் முயற்சிக்கப்படுகின்றது எனவும் வாசுதேவா குற்றம் சுமத்தியுள்ளார்.