பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மகனும், துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ், மகள் மிசா பாரதி ஆகியோரின் பினாமி சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர்.
மத்திய புகையிரத அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்த போது, அதிகளவான நிலங்கள் மற்றும் வீடுகளை போலி நிறுவனம் ஒன்றின் பெயரில் பினாமி சொத்துகளாக வாங்கிக் குவித்ததாக அவரது மகன் மற்றும் மகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக அமுலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக வருமான வரித்துறையினரும் தனியே வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக அவர்களை நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு வருமான வரித்துறை அழைப்பு அனுப்பிய போதும் அவர்கள் அதனை புறக்கணித்து விட்டனர்.
இந்நிலையில் தேஜஸ்வி, மிசா பாரதி மற்றும் சைலேஷ்குமார் ஆகியோர் பினாமி பெயரில் வாங்கியதாக சந்தேகிக்கப்படும் டெல்லியில் உள்ள ஒரு வீட்டையும், வீட்டு மனையையும் வருமான வரித்துறையினர் முடக்கியதுடன் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.