“ஆம். தவராசா சுட்டிப்பாக மன்னிப்பு என்ற வார்த்தையையோ அல்லது ஈ. பி. டி .பி . என்ற வார்த்தையையோ பாவிக்கவில்லை – நிலாந்தன்” மேற்படி தலைப்பினாலான, செய்தி தொடர்பான தங்கள் இணையத்தளத்தில் வெளியாகிய செய்திக்கு , எனது இச் செய்தி அறிக்கையை தங்கள் இணையத்தளத்தில் பிரசுரிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
நிலாந்தன் தவறினை ஏற்றுக்கொண்டிருப்பது தமிழ் ஊடகத்துறைக்கு ஓர் வழிகாட்டலே – சி.தவராசா ‘ஈ.பி.டி.பி, மன்னிப்பு ஆகிய சுட்டிப்பான வார்த்தைகளை அவர் (தவராசா) பயன்படுத்தி இருக்கவில்லை என்பது சரியே. எனவே எனது கட்டுரையிலிருந்து அந்த பகுதியை நீக்குகிறேன். அப்பிழைக்கு பொறுப்பேற்கின்றேன்’ என நிலாந்தன் ஊடகங்கள் வாயிலாக தெரியப்படுத்தியிருப்பது, ஊடகத்துறைக்கு, குறிப்பாக தமிழ் ஊடகத்துறைக்கு, ஓர் முன்மாதிரியான எடுத்துக்காட்டு.
தவறான அல்லது பிழையான விளக்கங்கள் ஏற்படுவதென்பது சகஜம். அவ்வாறான தவறுகள், பிழைகள் சரியான முறையில் சுட்டிக்காட்டப்படும் போது அத்தவறினை ஏற்பது ஊடகவியலாளர்களின் தரத்தை உயர்த்துமே தவிர, கீழ்மைப்படுத்தாது. நிலாந்தன் தவறினை ஏற்றுக்கொண்டிருப்பது தமிழ் ஊடகத்துறைக்கு ஓர் வழிகாட்டலென்றே கருதுகின்றேன்.
அன்றைய நிகழ்வில் (திரு.மு. திருநாவுக்கரசின் நூல் வெளியீட்டின்போது) நான் அரசியல் ரீதியாக தமிழ் மக்கள் தவறவிட்ட சந்தர்ப்பங்களை சுட்டிக்காட்டி பேசிக் கொண்டிருந்தபோது தான் குறுக்கீடுகள் இடம்பெற்றன. எனக்கு குறுக்கீடு செய்கின்றார்கள் என்பது மட்டும்தான் தெரியுமேயன்றி என்ன கூறினார்கள் என்பது கேட்கவில்லை.
ஒளிப்பதிவாளர்கள் எனக்கும் குறுக்கீடு செய்தவர்களுக்கும் இடையில் நின்று ஒளிப்பதிவினை மேற்கொண்டதனால் குறுக்கீடு செய்தவர்கள் கூறிய வார்த்தைகள் ஒலிப்பதிவாகியிருக்கலாம். நான் மேடையில் இருந்தவர்களை திரும்பிப் பார்த்தபொழுது அவர்கள் தொடர்ந்து பேசும் படி கூறினார்கள். அப்போது நான் விட்ட இடத்திலிருந்து ‘நாங்கள் செய்த எல்லாவற்றையும் மீட்டிக்கொள்வோம்……….’ என்று எனது உரையைத் தொடர்ந்தேன்.
ஆதலால் சபையிலிருந்தோர், நிலாந்தன் கூறியிருப்பது போன்று, பிழையாக விளக்கம் கொள்ளக்கூடிய ஒரு சூழல் இருந்திருக்கின்றது என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்று. ஏனெனில் குறுக்கீட்டாளர்கள் கூறியவற்றின் தொடர்ச்சியாகவே அவர்கள் எனது உரையை நோக்கியிருக்கிறார்கள். உண்மைநிலையை ஏற்று தெளிவுபடுத்திய நிலாந்தனுக்கு எனது நன்றி.
சி.தவராசா எதிர்க்கட்சித் தலைவர் வடக்கு மாகாணசபை