Home இலக்கியம் வாயடைத்துப் போனோம்: இ. முருகையன் பிறந்த நாள் இன்று!

வாயடைத்துப் போனோம்: இ. முருகையன் பிறந்த நாள் இன்று!

by admin

தொகுப்பு குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-

 
‘என் நண்பா, மெளனம் எதற்கு?’
என்று கேட்டிருந்தாய்.
வாயடைத்துப் போனோம்; வராதாம் ஒரு சொல்லும்.
‘திக்’ கென்ற மோதல் –
திடுக்கிட்டுப் போனோமே!

பொய் வதந்திக் கொள்ளி பொசுக்கென்று போய்ப்பற்ற
ஏற்ற வகையில்
இதமான நச்செண்ணெய்
ஊற்றி
அதில் ஊற வைத்த உள்ளங்கள் இல்லாமல்
இத்தனை தீய எரிவு நடைபெறுமா?

எத்தனை தீய எரிவு -தலையுடைப்பு,
குத்துவெட்டு, பாயும் குருதிக் குளிப்பாட்டு?

சற்று முன்னர் மட்டும் சகஐமாய்ச் சாதுவாய்ப்
பேசி இருந்த பிராணி
சடக்கென்று
வாரை இடுப்பாற் கழற்றி,
மனங்கூசாமல்
ஓங்கி விளாச ஒருப்பட்ட சிந்தையதாய்
மாறிவிட்ட விந்தை மருமம் என்ன?
சுர்ரென்று
சீறி எதிர்த்த செயலின் கருத்தென்ன?
கொள்ளை, திருட்டு, கொலைகள், கடையுடைப்பு,
பிள்ளை அரிவு, பிடுங்கல், வதை
புரிந்து
சீறி எதிர்த்த செயலின் கருத்தென்ன?

ஒன்றும் எமக்குச் சரியாய் விளங்கவில்லை.
‘திக்’கென்ற மோதல் – திக்கிட்டுப் போனோம் நாம்.
வாயடைத்துப் போனோம்;
வராதாம் ஒரு சொல்லும்.

(1978 / மல்லிகை)

ஈழத்தின் முன்னணிக் கவிஞர்களில் ஒருவரான 

இ. முருகையன் பிறந்த நாள் இன்று

 ஈழத்தின் முன்னணிக் கவிஞர்களுள் ஒருவரான இ. முருகையன் யாழ்ப்பாணம் ஏப்ரல் 23, 1935 இல் பிறந்தவர். 1950 முதல் கவிதை எழுதும் முருகையன் ஏராளமான கவிதைகள், சில காவியங்கள், மேடைப் பாநாடகங்கள், வானொலிப் பாநாடகங்களை எழுதியுள்ளார். திறனாய்வுக் கட்டுரைகள், கவிதை மொழிபெயர்ப்பு என்பவற்றிலும் ஈடுபட்டுள்ளார்.
1964 – 1965 காலப்பகுதியில் வெளிவந்த நோக்கு என்ற காலாண்டுக் கவிதை இதழின் இணையாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டம், தென்மராட்சியில் கல்வயல் கிராமத்தில் தமிழாசிரியர் இராமுப்பிள்ளைக்கும் செல்லம்மாவுக்கும் மூத்த புதல்வனாகப் பிறந்தவர் முருகையன். இவருடன் கூடப் பிறந்தவர் நாடக வல்லுனரும், கவிஞருமான சிவானந்தன். முருகையன் தனது ஆரம்பக் கல்வியை கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும், இடைநிலைக்கல்வியை சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும், யாழ் இந்துக் கல்லூரியிலும் கற்றார்.
வித்துவான் க. கார்த்திகேசுவிடம் தமிழ் கற்ற முருகையன் உயர்கல்வியை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கொழும்பு வளாகத்தில் பயின்று 1956 ஆம் ஆண்டில் விஞ்ஞானப் பட்டதாரியானார். பின்னர் 1961 ஆம் ஆண்டில் இலண்டனில் கலைமாணிப் பட்டத்தையும் பெற்றார். 1985 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவரது இலக்கியப் பணியைப் பாராட்டி முனைவர் பட்டத்தை வழங்கிக் கௌரவித்தது.
சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் 1956 இல் விஞ்ஞான ஆசிரியப் பணியைத் தொடங்கிய முருகையன், அரச மொழித் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகவும், பாடநூல் வெளியீட்டுத் திணைக்களத்தில் முதன்மைப் பணிப்பாளராகவும், கோப்பாய் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாண மாவட்டங்களில் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றினார். இறுதியாக, 1986 இல் யாழ் பல்கலைக்கழகத்தில் முதுதுணை பதிவாளராகப் பணியாற்றி 1995 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.
இலங்கை அரசகரும மொழிகள் திணைக்களத்தில் பணியாற்றிய முருகையன் தமிழ் கலைச்சொல்லாக்கத்துக்கு கணிசமானளவு பங்களிப்பினைச் செலுத்தியுள்ளார். தேசிய கலை இலக்கியப்பேரவையின் தலைவராயிருந்த இ. முருகையன் அப்பேரவையின் தொடக்க காலத்திலிருந்தே பங்கெடுத்து வந்ததுடன் தேசிய கலை இலக்கியப் பேரவையின் சஞ்சிகையான தாயகம் இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்தார்.
இலங்கை அரசினால் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் அதிஉயர் விருதான சாகித்திய இரத்தினம் விருது 2007 ஆம் ஆண்டில் முருகையனுக்கு வழங்கப்பட்டது. முருகையன் தனது நூல்களுக்குப் பதிப்புரிமை கோருவதை வழக்கமாகக் கொண்டிருக்கவில்லை. பதிப்பகத்தாரிடம் தனது எழுத்துக்களை மக்களில் எவரும் எப்படியும் பயன்படுத்தலாம் என்று சொல்லிவரும் வழக்கமுடையவர். ஜூன் 27, 2009இல் முருகையன் இயற்கை எய்தினார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More