குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
கிளிநொச்சி முழங்காவில் ஆதார மருத்துவமனைக்கு ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை நாள்தோறும் நோயாளர்கள் நடந்து செல்ல வேண்டிய நிலையில் கிளிநொச்சியில் இருந்து முழங்காவிலுக்கு இடையில் சேவையில் ஈடுபடுகின்ற அனைத்து பஸ்களும் மருத்துவமனை வரை வந்து செல்லக் கூடிய வகையில் நடவடிக்கை எடுக்குமாறு கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், பூநகரிப் பிரதேச செயலாளரிடம் மன மூலமும் நேரடியாகவும் இப்பகுதி பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு, பொன்னாவெளி, நாச்சிக்குடா, கரியாலைநாகபடுவான், இரணைமாதாநகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஐயாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் முழங்காவில் ஆதார மருத்துவமனையினையே உயிர் நாடியாக நம்பியுள்ளனர்.
வன்னேரிக்குளம் மருத்துவமனையில் கடந்த பத்தாண்டுகளாக மருத்துவர் இல்லாத நிலையிலும் இக்கிராம மக்களும் முழங்காவில் மருத்துவமனைக்கே வருகின்றனர். ஏ-32 சாலையில் முழங்காவில் சந்தியில் இறங்கி மருத்துவமனை அமைந்துள்ள ஒரு கிலோ மீற்றர் தூரம் வரையில் நோயாளர் நடந்து செல்ல வேண்டிய நிலையில் முழங்காவில் பஸ் நிலையத்தில் இருந்து பணியினைத் தொடங்கும் பஸ்களும் கிளிநொச்சியில் இருந்து முழங்காவில் நோக்கி வரும் பஸ்களும் மருத்துவமனை வரை வந்து செல்வதன் மூலம் நோயாளர்கள் ஒரு கிலோ மீற்றர் தூரம் நடந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
தற்போது முதியவர்கள், மகப்பேற்றுக்குரிய பெண்கள், மாணவர்கள் உட்பட அனைவரும் நடந்து செல்லும் நிலையில் மாவட்டச் செயலாளர் அவசரமாக முழங்காவில் மருத்துவமனை வரை பஸ் சேவையினை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி பொது அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் கடந்த ஏழாண்டுகளாக தொடர்ச்சியாக தமது கோரிக்கைகளை மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர் கவனத்தில் கொள்ளவில்லை எனவும் முழங்காவில் பிரதேச முதியோர் சங்கம் கவலைத் தெரிவித்துள்ளது.