தடைசெய்யப்பட்ட 6 முஸ்லிம் நாடுகள் ‘விசா’ பெற குடும்ப உறவுகளை குறிப்பிட வேண்டும்’ என அமெரிக்கா புதிய நிபந்தனை விதித்துள்ளது.
சிரியா, லிபியா, உள்ளிட்ட 6 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா செல்வதற்கு ஜனாதிபதி டிரம்ப் அரசு ‘விசா’ தடை விதித்தது. அதே போன்று அகதிகள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது.
அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில், அமெரிக்க நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன. இந்த நிலையில் தடை செய்யப்பட்ட 6 நாடுகளை சேர்ந்தவர்கள் ‘விசா’ பெற டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு புதிய நிபந்தனைகளையும், வழிகாட்டுதல் முறையையும் விதித்துள்ளது.
அதன்படி தடை செய்யப்பட்ட 6 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா செல்லும்போது அங்கு தங்கியிருக்கும் தங்களது பெற்றோர், கணவன் -மனைவி, குழந்தை, மகன், மகள், மருமகள், மருமகன் உறவு முறைகளை கட்டாயம் நிரூபிக்க வேண்டும்.
எனினும் பாட்டி, தாத்தா, பேரக்குழந்தைகள், அத்தை, மாமா, அண்டை வீட்டினர், மைத்துனர், மைத்துனி, சித்தப்பா குழந்தைகள் போன்றோர் நெருங்கிய உறவினர்களாக கருத முடியாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதல் உத்தரவுகள், வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு அனுப்பபட்டுள்ளன. இந்த நடைமுறை இன்று முதல் அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் டொனால்டு டிரம்பின் அரசு இத்தகைய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.