குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முயற்சித்த பெண் ஒருவருக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய சூழ்ச்சித் திட்டம் தீட்டியதனை ஒப்புக் கொண்ட 62 வயதான தமிழ் பெண் ஒருவருக்கே இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க இன்றைய தினம் சிறைத்தண்டனையையும், அபராதத்தையும் விதித்துள்ளார்.
இரண்டாண்டு கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து அந்த தண்டனையை பத்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைத்துள்ளதுடன், 25000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் ஆறு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2008ம் ஆண்டில் மார்ச் மாதம் 15ம் திகதி பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வைத்து அப்போதைய அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனவை தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மூலம் படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டியமை, பெண் தற்கொலை குண்டுதாரிக்கு அடைக்கலம் வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சட்ட மா அதிபரினால் முன்வைக்கப்பட்டிருந்தது.