கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளதையடுத்து, இது தொடர்பாக விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூட உள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக வடகொரிய அரச தொலைக்காட்சி அறிவித்துள்ள நிலையில்;, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை உடனே கூட்டி இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது.
இதையடுத்து, வட கொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை தொடர்பாக விவாதிக்க ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூட உள்ளது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய ஐந்து நாடுகளும் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன.
மேற்கண்ட நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் ஐ.நா தலைவர் அண்டோனியா குட்ரஸ் இந்த அவசர கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
ஏற்கனவே, வட கொரியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை ஐ.நா விதித்திருந்தாலும், தற்போது மேலும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.