குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஜனவரி மாதம் 8ம் திகதி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்பதனால் அந்தக் கட்சியின் கள்வர்களும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்பதனால் அந்தக் கட்சியின் கள்வர்களும் காப்பாற்றப்படுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றில் நேற்றைய தினம் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகத்தின் சம்பளம், கொடுப்பனவு குறித்த பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கள்வர்கள் கட்சி நிற பேதங்கள் இன்றி தண்டிக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கம் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி கள்வர்களை பிடிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தாலும் அதனை உரிய முறையில் நிறைவேற்றத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த உரையை ஆற்றியதன் பின்னர் இரண்டு கட்சிகளினதும் தலைவர்கள் தம்முடன் கோபிக்க கூடும் என்ற போதிலும் உண்மைகள் கசப்பானவை என்றாலும் அவற்றை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானது எனவும் ரஞ்சன் ராமநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.