குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இனவாதத்தை தூண்டி நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதற்கு சிலர் முயற்சிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் சமாதானமாக வாழக்கூடிய ஓர் சூழ்நிலையை நாம் உருவாக்கியுள்ளோம் என பிரதமர் நேற்றைய தினம் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள் ,
சில ஊடகங்களும் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர் இனவாத, மதவாத கருத்துக்களை தூண்டும் வகையில் சில ஊடகங்கள் செய்தி அறிக்கையிடுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
அனைத்து காவல்துறைப் பிரிவிலும் பகலிலும் இரவிலும் வீதி ரோந்துகளை மேற்கொள்வதன் மூலமும் மக்களை தெளிவுபடுத்துவதன் மூலமும் நிலைமைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமிய பள்ளிவாசல்கள் மற்றும் பௌத்த விஹாரைகளுக்கு ஏதேனும் சேதம் விளைவிக்கப்பட்டால் அதற்கு நிவாரணங்களை வழங்குவது தமது கொள்கையாகும் என குறிப்பிட்டுள்ள பிரதமா இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை பாதுகாக்க எவரும் முயற்சிக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இனவாதம், மதவாதம் போன்றவற்றுக்கு நாட்டில் இனி இடமில்லை எனவும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் கடந்த காலங்களில் குப்பை கூடைக்குள்தான் வீசி எறியப்பட்டனர் என பிரதமர் தமது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.