குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பயங்கரவாத எதிர்ப்பு குறித்த விசேட பிரதிநிதி இலங்கைக்கு செல்லவுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு விசேட பிரதிநிதியாக பென் எமர்சன் (Ben Emmerson)கடமையாற்றி வருகின்றார்.
பென் எமர்சன் எதிர்வரும் 10ம் திகதி முதல் 14ம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமை பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு குறித்த இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து நேரில் கண்டறிந்து கொள்ளும் நோக்கில் அவர் இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளார்.
மனித உரிமை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை உருவாக்குவதற்கு தேவையான ஆலோசனை வழிகாட்டல்களையும் தாம் வழங்க உள்ளதாக பென் எமர்சன் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகாரம், சட்டம் ஒழுங்கு, தெற்கு அபிவிருத்தி, நீதி, பாதுகாப்பு, நிதி, ஊடகத்துறை, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு உள்ளிட்ட அமைச்சர்களை பென் எமர்சன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இலங்கைக்கு செல்ல உள்ள எமர்சன் சிறைக் கைதிகளையும் பார்வையிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.