குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உள்நாட்டு இறைவரித் திணைக்கள உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றில் ஈடுபட உள்ளனர்.
உத்தேச உள்நாட்டு இறைவரி சட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு இவ்வாறு, உள்நாட்டு இறைவரித் திணைக்கள உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர்.
தொழிற்சங்கங்களின் ஆலோசனை எதுவும் கோராது இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தினால் இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர்கள் மதவழிபாட்டுத் தளங்கள், நலன்புரி சங்கங்கள், மரண நிதி சங்கங்கள் உள்ளிட்டனவற்றிடமும் பணம் அறவீடு செய்யும் வகையில் இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என குற்றம் சுமத்தியுள்ளனர்.
தலைமையக் காரியாலயம் மற்றும் மாவட்ட ரீதியாக இயங்கி வரும் 17 கிளைக் காரியாலயங்கள் ஆகியனவற்றில் இன்றைய தினம் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
உரிய பதிலளிக்கப்படாவிட்டால் சுங்கத் திணைக்களம் உள்ளிட்ட ஏனைய சில தொழிற்சங்கங்களையும் இணைத்துக் கொண்டு பாரியளவில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.