யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் உயிரிழப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான 5 காவல்துறை உத்தியோகஸ்தர்களின் பிணைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் யாழ். நீதிமன்றில் நேற்றையதினம் குறித்த பிணை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையில் அவசியமற்ற வகையில் மேல் நீதிமன்றம் தலையிட மாட்டாது எனவும் இதுவரை புலன்விசாரணைகள் நிறைவு பெறாமையினால் துப்பாக்கிகள் தொடர்பான இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கை கிடைக்கப்பெறவில்லை எனவும் சுட்டிக்காட்டிய நீதிபதி இளஞ்செழியன் பிணை கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் சார்பாக, அவர்களின் மனைவிமார், உறவினர்கள் மூலமாக தாக்கல் செய்யப்பட்ட பிணை கோரிக்கை மீதான விசாரணைi எதிர்வரும் ஓகஸ்ட் 8 ஆம் திகதி வரை யாழ். மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு, ஒக்டோபர் 19 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, அவர்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.