யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காட்டில் இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை உத்தியோகத்தர்கள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதமாக மணல் அகழச் சென்றதாக தெரிவித்து காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இன்று துன்னாலை பகுதியில் பதற்றநிலை காணப்பட்டது.
உயிரிழந்த இளைஞரின் கிராமமான துன்னாலைப் பகுதியில் அமைந்திருந்த காவலரண் பொது மக்களால் அடித்து நொருக்கப்பட்டு தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் வீதிகளின் குறுக்கே டயர்களை தீயிட்டுக் கொழுத்தி மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டதால் துன்னாலை பகுதியில் இன்று பதற்றநிலை காணப்பட்டது.
பருத்தித்துறை காவல்நிலையத்தில் கடமைபுரியும் உப காவல் பரிசோதகர் சிவராசா சஞ்ஜீவ மற்றும் அபுதாரி மொஹமட் முபாரக் ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த இளைஞரின் இறுதிக் கிரியைகள் நாளை (11) துன்னாலையில் நடைபெறவிருப்பதால் மேலும் அசம்பாவிதங்கள் இடம்பெறலாம் என்ற காரணத்தினால் குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.