மூதூர் காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஆரம்ப பாடசாலை மாணவிகள் மூவர் துஷ்பிரயோகத்துக்குட்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள, பிரதான சந்தேகநபரை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தி இரு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, மூதூர் நீதவான் நீதிமன்றம், அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த மே மாதம் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளதாகவும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் முன்னலையாகியிருந்த நிலையில் வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 11ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாடசாலையின் கட்டட நிர்மாண வேலையில் ஈடுபட்டுவரும் தொழிலாளிகள் சிலர் பிரத்தியேக வகுப்புக்காகச் சென்ற குறித்த மாணவிகளை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாகக் தெரிவித்து பெற்றோர்களினால் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.