கங்கை நதியைத் தூய்மைப்படுத்த, அதன் கரையோரத்தில் குப்பைகள் கொட்டினால் 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்குமாறு அதிகாரிகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் புனித நதிகளாகக் கருதப்படும் கங்கை, யமுனைக்கு ‘வாழும் மனிதர்கள்’ அந்தஸ்தை வழங்கி உத்தராகண்ட் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
இந்நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு, கங்கை நதியை தூய் மைப்படுத்துவதற்கான பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளி யிட்டது.
அதன்படி, ஹரித்துவார் உன்னாவ் இடையே கங்கை நதிக் கரையோரம் குப்பைகள், கழிவுகளைக் கொட்டினால் 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்க அரசு அதிகாரிகளுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி கங்கை நதியில் இருந்து 500 மீட்டருக்குள் குப்பைகள் கொட்ட அனுமதிக்க கூடாது. அத்துடன் ஹரித்துவார்- உன்னாவ் இடையே நதியில் இருந்து 100 மீட்டர் தூர பகுதி வளர்ச்சித் திட்டம் மேற்கொள்ளக்கூடாத பகுதியாக அறிவிக்கப்படவேண்டும் என்றும் பசுமை தீர்ப்பாயம் உத்தர விட்டுள்ளது.
மேலும் கங்கை நதிக் கரையோரம் மதச் சடங்குகள் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, உத்தரபிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்கள் வகுக்க வேண்டும்.
கங்கை நதிக் கரையோரத்தில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகளை, 6 வாரங்களுக்குள் வேறு இடங்களுக்கு மாற்ற உத்தரபிரதேச அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.