குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான சூத்திரதாரியான சுவிஸ்குமார் தப்பித்து செல்ல உதவிய குற்றசாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் வடமாகாண சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபரை எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வடமாகாண முன்னாள் சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபரும் தற்போதைய மத்திய மாகாண சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபருமான லலித் ஏ ஜெயசிங்க நேற்றைய தினம் சனிக்கிழமை குற்ற தடுப்பு புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கைதுசெய்யப்பட்டவரை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணியளவில் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் இ. சபேசனின் வாசஸ்தலத்தில் அவர் முன்னிலையில் முற்படுத்திய போதே பதில் நீதிவான் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
அதேவேளை கைதுசெய்யப்பட்ட குறித்த காவல்துறை உயர் அதிகாரியை மூன்று நாட்களுக்கு தமது கட்டுப்பாட்டில் தடுத்து வைத்து விசாரணை செய்யவதற்கு குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினர் பதில் நீதிவானிடம் அனுமதி கோரினார்கள். அதற்கு பதில் நீதிவான் அனுமதியளித்தார்.
கைது செய்யப்பட்ட சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபர் நேற்றைய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் முற்படுத்தபடுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் இன்றைய தினம் பதில் நீதிவான் முன்னிலையிலையே முற்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான சூத்திரதாரி சுவிஸ்குமார் தப்பிக்க உதவிய காவல்துறை அதிகாரி கைது.
Jul 15, 2017 @ 10:19
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான சூத்திரதாரியான சுவிஸ்குமார் தப்பித்து செல்ல உதவிய குற்றசாட்டின் கீழ் , முன்னாள் வடமாகாண பிரதி காவல்துறைமா குற்றதடுப்பு புலனாய்வு பிரிவு அதிகாரி கைது செய்ப்பட்டுள்ளார்.
வடமாகாண முன்னாள் பிரதி காவல்துறைமா அதிபரும் தற்போதைய மத்திய மாகாண பிரதி காவல்துறைமா அதிபருமான லலித் ஏ ஜெயசிங்கவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பிரதி காவல்துறைமா அதிபர் இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.