இது கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக டி.ஜி.பி. சத்தியநாராயணராவுக்கும், டி.ஐ.ஜி. ரூபாவுக்கும் இடையே தற்போது மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள கைதிகள் 2 பிளவுகளாக பிரிந்து செயல்படுவதாக கூறப்படுகிறது.
இதில் சிறை அதிகாரிகளுக்கு ஆதரவாக ஒரு பிரிவினரும், சிறையில் முறைகேடுகளை வெளிப்படுத்திய டி.ஐ.ஜி. ரூபாவுக்கு ஆதரவாக ஒரு பிரிவினரும் செயல்படுவதாக கூறப்படுகிறது. பரப்பன அக்ரஹாரா சிறையில் நேற்று முன்தினம் சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மற்றும் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா ஆகியோர் தனித்தனியாக சென்று ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது டி.ஐ.ஜி. ரூபாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கைதிகள் கோஷமிட்டனர். அவர் ஆய்வு செய்து சிறையில் இருந்து திரும்பியபோதும் கைதிகள் 2 பிரிவுகளாக பிரிந்து தங்களின் அறைகளுக்கு செல்ல மறுத்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, பெங்களூர் தென்கிழக்கு மண்டல துணை காவற்துறை ஆணையர் போரலிங்கய்யா கூறுகையில், ‘நேற்று இரவு (நேற்று முன்தினம்) கைதிகள் 2 பிரிவுகளாக பிரிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில், சிறைக்கு சென்ற நான் கைதிகளின் 2 பிரிவினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினேன். இதனைத்தொடர்ந்து, கைதிகள் தங்களின் சிறை அறைகளுக்கு சென்றனர்’ எனக் கூறியுள்ளார்.
இது கைதிகளுக்குள் குழுமோதல்களை உருவாக்கும் அபாயம் இருக்கிறது. இதனையடுத்து பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து 32 கைதிகள் மாநிலத்தின் வெவ்வேறு சிறைகளுக்கு நேற்று மாற்றப்பட்னடுள்ளனர். மேலும் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட விவகாரம் கர்நாடக அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாகவும், கர்நாடக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், அரசுக்கு மக்களிடம் அவப் பெயர் ஏற்பட்டுவிடுமோ என அரசு மிகுந்த கவலையடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கைதிகளுக்கு இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை உள்ளது. இந்த பிரச்சினையால் அரசியல் தலைவராக இருக்கும் சசிகலாவுக்கு பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது எனவும், அரசு கருதுகிறது. அதோடு வரும் நாட்களில் இத்தகைய சிறப்பு வசதிகள் புகார்களை தடுக்க சசிகலாவை கர்நாடகத்திற்குள் வேறு சிறைக்கு மாற்றலாமா? அல்லது வெளிமாநில சிறைக்கு மாற்றலாமா? என கர்நாடக அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை கர்நாடகத்திற்குள் வேறு சிறைக்கு சசிகலாவை மாற்றினால் அதற்கு உச்ச நீதிமன்றின் அனுமதி தேவை இல்லை என்றும், ஒருவேளை தமிழ்நாடு சிறைக்கோ அல்லது வேறு மாநில சிறைக்கோ அவரை மாற்றுவதாக இருந்தால் உச்ச நீதிமன்றின் அனுமதி கட்டாயம் தேவை என்றும் சிறைத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.