கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பன்றி காய்ச்சல் அதிகம் பேரை தாக்கி உள்ளது. கடந்த ஆண்டு முழுவதும் 1786 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
ஆனால், இந்த ஆண்டு இதுவரை 12 ஆயிரத்து 460 பேருக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இது வரை 600 பேர் உயிர் இழந்துள்ளனர். என நாட்டில் பன்றி காய்ச்சல் பரவி வருவது தொடர்பாக பாராளுமன்ற மேல்-சபையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா பதில் அளித்துள்ளார்.
குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள். அங்கு 2 ஆயிரத்து 324 பேர் பாதிக்கப்பட்டு 284 பேர் உயிர் இழந்துள்ளனர்.
குஜராத்தில் 289 பேரை நோய் தாக்கி இருந்தது. இதில் 29 பேர் உயிர் இழந்துள்ளனர். கேரளாவில் 1127 பேர் பாதிக்கப்பட்டு 63 பேர் இறந்துள்ளனர்.
ராஜஸ்தானில் 407 பேரை நோய் பாதித்து இருந்தது. அதில் 59 பேர் பலியாகி உள்ளனர்.
கர்நாடகாவில் 2 ஆயிரத்து 377 பேர் பன்றி காய்ச்சலுக்கு ஆளானார்கள். இவர்களில் 15 பேர் இறந்துள்ளனர். தெலுங்கானாவில் 1443 பேர் பாதிக்கப்பட்டு 15 பேர் இறந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 896 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது. அவர்களில் 15 பேர் உயிர் இழந்துள்ளனர்.
நோய் மேலும் பரவாமல் தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கான மருந்துகள் நாடு முழுவதும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட பன்றி காய்ச்சலுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்து இருப்பதாகவும் மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா பதில் அளித்துள்ளார்.