குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தண்டனை கைதி ஒருவர் சிவில் உடையில் வழக்கில் சாட்சியம் அளித்தமை தொடர்பில் விளக்கம் கோருவதற்காக அனுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதாய விளக்கம் ( ரயலட் பார் ) அழைப்பாணை விடுத்துள்ளது.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணையின் இரண்டாம் கட்ட சாட்சி பதிவுகள் நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்கம் ( ரயலட் பார் ) முறைமையில் நடைபெற்றது.
அதன் போது குறித்த வழக்கில் சாட்சியம் அளிக்க மன்றுக்கு வந்திருந்த முன்னாள் கொடிகாமம் காவல் நிலைய பொறுப்பதிகாரி , சிந்தக்க நிஷாந்த பிரிய பண்டார , சிவில் உடையில் கழுத்துப்பட்டி அணிந்த நிலையில் வந்திருந்தார்.
குறித்த காவல் நிலைய சுன்னாகம் காவல் நிலையத்தில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய வேளை சிறிஸ்கந்தராஜா சுமணன் எனும் இளைஞனை 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் திகதி கைது செய்து காவல்துறை காவலில் வைத்து சித்திரவதை புரிந்து படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
அதில் சித்திரவதை குற்ற சாட்டு தொடர்பில் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
குறித்த வழக்கு விசாரணையில் சிந்தக்க நிஷாந்த பிரிய பண்டார குற்றவாளியாக கண்டு , பத்தாண்டு கால கடூழிய சிறைத் தண்டனையும், 25ஆயிரம் ரூபா தண்டப்பணமும், கட்டத்தவறின் 1ஆண்டு கடூழிய சிறைத்தண்டனையும், சுமணணது இரத்த உறவினருக்கு 2 இலட்சம் ரூபா நஷ்ட ஈடும் கட்டத்தவறின் 1ஆண்டு கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.
அதேவேளை கிளிநொச்சி நீதிமன்றில் சிந்தக்க நிஷாந்த பிரிய பண்டாரவுக்கு எதிராக கொலை குற்றசாட்டு சுமத்தப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. அந்த வழக்கில் அவர் விளக்கமறியல் கைதியாக தடுத்து வைக்கபப்ட்டு உள்ளார். குறித்த வழக்கில் பிணை கோரி யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு உள்ளது.
இந்நிலையில் குறித்த சிந்தக்க நிஷாந்த பிரிய பண்டார கைதிகளுக்கு வழங்கப்படும் உடை அணியாது , சாதாரண உடையணிந்து கழுத்துப்பட்டி அணிந்த நிலையில் அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து மன்றுக்கு சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களால் அழைத்து வரப்பட்டார்.
அது தொடர்பில் மூன்று மேல் நீதிபதிகளும் கடும் விசனம் அடைந்திருந்தனர். அது தொடர்பில் , மூன்று நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவிக்கையில் , எமது நீதிமன்றினால் குற்றவாளி என அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை அனுபவிக்கும் ஒருவருக்கே , சிறைக் கைதிகளின் உடை அணியாது, சாதாரண உடையுடன் சாட்சி அளிக்க அழைத்து வருகின்றீர்கள் என்றால் , சில வேளைகளில் இவர் சிறையில் தான் தடுத்து வைத்து இருக்கின்றீர்களா ? எனும் சந்தேகம் கூட தோன்றுகின்றது. என தெரிவித்து இருந்தார்.
அதனை தொடர்ந்து மூன்று நீதிபதிகளும் ஏக மனதாக முடிவெடுத்து அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் யு.மு. பண்டார வை எதிர்வரும் 24ஆம் திகதி காலை 8.30 மணிக்கு மன்றில் ஆஜர் ஆக வேண்டும் என உத்தரவு இட்டு உள்ளனர்