152
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சுவிஸ்குமாரின் பாஸ்போர்ட்டை முடக்க உத்தரவு இட்டவர் எப்படி சுவிஸ் குமார் தப்பி செல்ல உதவி இருக்கலாம் என முன்னாள் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தரப்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவர் தப்பி செல்ல உதவினார் எனும் சந்தேகத்தில் முன்னாள் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க கைது செய்யப்பட்டு உள்ளார்.
அது தொடர்பிலான வழக்கு விசாரணை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
மூன்று சட்டதரணிகள் முன்னிலை
அதன் போது சந்தேக நபரான முன்னாள் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மன்றில் முற்படுத்தப்பட்டார். அவர் சார்பில் மூன்று சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
அதேவேளை குற்றபுலனாய்வு திணைக்கள உதவி பொலிஸ் அத்தியட்சகர் திசேரா மற்றும் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.
காணொளியை ஆராய உத்தரவு.
அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது , கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி இரவு சுவிஸ் குமார் என்பவரை ஊர் மக்கள் பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து இருந்தனர். அதன் போது அந்த இடத்திற்கு அப்போதைய பிரதி அமைச்சரும் , தற்போதைய இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் சென்று ஊரவர்களிடம் இருந்து சுவிஸ்குமார் என்பவரை விடுவித்தார் என கூறி காணொளி ஆதாரம் ஒன்றினை சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மன்றில் சமர்ப்பித்தனர்.
குறித்த காணொளி தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதன் போது நீதவான் உத்தரவு இட்டார்.
ஸ்ரீகஜனை ஏன் கைது செய்யவில்லை ?
அதேவேளை குறித்த வழக்கில் சுவிஸ் குமார் சரணடைந்ததாகவும் அவரை விடுவித்ததாகவும் கூறப்படும் உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் என்பவர் இந்தியாவுக்கு தப்பி செல்ல முற்பட்ட போதே குற்றபுலானய்வு துறையினர் கைது செய்திருக்க வேண்டும். ஏன் அவர்கள் அவரை கைது செய்யவில்லை ? இதனால் இவர்கள் மீது எமக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. ஸ்ரீகஜனை இவர்கள் கைது செய்து மறைந்து வைத்துள்ளார்களா ? எனும் சந்தேகமும் எமக்கு எழுந்துள்ளது.
வலுவான ஆதாரங்கள் இல்லை.
சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மீது குற்ற புலனாய்வு துறையினர் வலுவான ஆதாரங்கள் எதனையும் இதுவரையில் முன் வைக்க வில்லை.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் சுவிஸ் குமார் எனும் நபரில் சந்தேகம் உள்ளது. அவரை கைது செய்ய வேண்டும். அவர் வெளிநாடு தப்பி செல்ல முடியாத வாறு விமான நிலைய போலீசாருக்கு அறிவிக்க வேண்டும் அவரின் பாஸ்வோர்ட்ட முடக்க வேண்டும் என உத்தரவு இட்ட சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எவ்வாறு சுவிஸ் குமார் தப்பி செல்ல உதவி இருக்க முடியும்
பிணை விண்ணப்பம் நிராகரிப்பு.
அதேவேளை சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர கைது செய்து நீதவான் முன்னிலையில் முற்படுத்த கொண்டு வரும் வேளையில் , இடம்பெற்ற விபத்தில் அவர் காயமடைந்துள்ளமையால் , அவரின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு பிணை வழங்க வேண்டும் என சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் பிணை விண்ணப்பம் செய்தனர்.
குறித்த சந்தேகநபரை பிணையில் விடுதலை செய்தால் , மாணவி கொலை வழக்குக்கு பாதிப்பு ஏற்படாது என மன்று முழுமையாக திருப்தி அடையாததால் , பிணை விண்ணப்பத்தினை நிராகரிப்பதாக தெரிவித்த நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டார்.
சிகிச்சை அளிக்க உத்தரவு.
அதேவேளை சந்தேகநபருக்கு தேவையான சிகிச்சைகளை முழுமையாக அளிக்க ஏற்பாடு செய்யுமாறும் அது தொடர்பிலான அறிக்கையினை மன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு பணித்தார்.
இடைத்தரகர்கள் தொடர்பில் விசாரணை.
இலங்கையில் யுத்தம் நடைபெற்று முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் சுவிஸ் குமார் என்பவர் சுவிஸ் நாட்டில் வசித்து வந்த நபர். சிரேஸ்ட பொலிஸ்மா அதிபருடன் நேரடி தொடர்பு இருக்கும் என்பது தொடர்பில் மன்றுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே இருவருக்கும் இடையில் இடைத்தரகர்கள் இருந்திருக்கலாம் எனும் சந்தேகம் ஏற்பட்டு உள்ளமையால் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் குற்றபுலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு இட்டுள்ளார்
Spread the love
1 comment
‘சுவிஸ்குமாரின் பாஸ்போர்ட்டை முடக்க உத்தரவு இட்டவர் எப்படி அவர் தப்பி செல்ல உதவி இருக்கலாம் ? ’, எனக் கேட்ட சட்டத்தரணிகளுக்கும், ‘துப்பாக்கிதாரியின் குறி திரு. இளஞ்செழியன் அல்ல, என்று கூறிய போலீஸ் ஊடகப் பேச்சாளருக்கும் இடையே என்னால் அதிக வித்தியாசத்தைக் காண முடியவில்லை.
நீதிபதி குறியாக இருந்திருந்தால், அவரின் காரில் சூட்டு அடயாளங்கள் இருந்திருக்க வேண்டுமே, என ஊடகப் பேச்சாளர் கேட்டிருந்தார். அவர் இப்படிக் கேட்குமுன்னரே, நீதிபதி சம்பவ இடத்தில் (?) கூறியபோது, கொலையுண்டவருடன் துப்பாக்கிதாரி இழுபறிப்பட்டுக்கொண்டிருக்கும்போது தான் அவ்விடத்துக்குச் சென்றதாகத் தெரிவித்திருக்கின்றார். அதாவது சூட்டுச் சந்தேக நபரின் கைகளுக்குத் துப்பாக்கி செல்லுமுன்னரே நீதிபதி காருக்கு அருகாமையில் இருக்கவில்லையென்பது புலனாகின்றது. நிலைமை இப்படி இருக்கும்போது, காரைச் சேதமாகும் நோக்கம் துப்பாக்கிதாரிக்கு ஏன் இருக்கவேண்டும்?
சுவிஸ்குமாரின் பாஸ்போர்ட்டை முடக்க உத்தரவு இட்ட போலீஸ் அதிகாரிக்கு, குறித்த நடவடிக்கையைத் தடுக்கும் நோக்கில் கோடிகள் கைமாறியிருக்கலாமென்பதை மறுப்பதற்கில்லை? ஏனெனில், குறித்த சம்பவத்தில் பலருக்கும் பல வழிகளிலும் லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பதென்பது, உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு புறம் பாஸ்போட்டை முடக்கிய கையோடு, மறுபுறம் தப்பிக்க உதவியிருக்கலாமென்பதும் சாத்தியமே! பணம்தான் பத்தும் செய்யுமே?
ஆக, இலங்கையைப் பொறுத்தவரை நீதிக்கட்டமைப்புச் செத்துவிட்டது, என்பதே உண்மை! இன்னும் சொல்வதானால், ‘இலங்கையில், நீதி, நியாயம் என்பனவெல்லாம் கோடிகளுக்குக் கூவி விற்கப்படுகின்றன’, என்பது, உண்மையே!