புலிகள் தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலிலேயே உள்ளடக்கப்பட்டுள்ளனர் – ஐரோப்பிய ஒன்றியம் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதப் பட்டியலிலிருந்து நீக்குவதாக ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் அறிவித்துள்ளது. எனினும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் உள்ளடக்குவது குறித்த முறைமை பற்றிய சட்ட ரீதியான தீர்ப்பையே, நீதிமன்றம் வழங்கியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ள ஐரோப்பிய ஒன்றியம் எனினும், பயங்கரவாத அமைப்பு ஒன்று தொடர்பிலான மதிப்பீடுகளை மேற்கொள்ளும் பொறிமுறைமையில் இந்த தீர்ப்பு எவ்வித தலையீடும் செய்யாது எனவும் குறிப்பிட்டுள்ளது.
2011ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலப் பகுதிக்கான மதிப்பீட்டின் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், எனினும், 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலான புதிய மதிப்பீடுகளின் அடிப்படையில், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு இந்த நீதிமன்ற தீர்ப்பு எந்த வகையிலும் தாக்கத்தை செலுத்தாது என குறிப்பிட்டுள்ளது.
எனவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கமாகவே ஐரோப்பிய ஒன்றியத்தினால் கருதப்படும் என தெரிவித்துள்ள அதேவேளை, தற்போது நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களினால் கிரமமாக மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படும் எனவும். மிகவும் நிதானமாக இந்த தீர்ப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த வகையில் ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாகவே தொடர்ந்தும் கருதுவதாக ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.