வெனிசுலாவில் நடைபெற்ற அரசியல் நிர்ணய சபை தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறிய சூழலில் 13 பேர் வரை பலியாகிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் புதிய அரசியலமைப்பு சட்டம் இயற்றுவதற்காக ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ முடிவு செய்திருந்த நிலையில், இதற்கான அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களை நியமிப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. எனினும், ஜனாதிபதி நிக்கோலஸின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு எதிர்க்கட்சிகளும், பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இதில், போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில், 13 பேர் வரை பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரசியல் நிர்ணய சபையை எதிர்த்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடைபெற்று வந்த போராட்டத்தில் இதுவரை 121 பேர் வரை பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.