குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொக்குவில் பகுதியில் காவல்துறையினர் மீது வாள் வெட்டு தாக்குதலை நடத்தியவர்களில் பிரதான சந்தேகநபர் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் எனவும் தற்போது ஆவா குழுவுடன் சேர்ந்து இயங்கும் நபர் என காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட காவல்துறைமா அதிபர் யாழ்.தலைமை காவல் நிலையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடாத்தி இருந்தார். அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
தாக்குதல் சம்பவத்தில் தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர் முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர். அவர் தற்போது யாழில் பிரபலமான ஆவா குழு எனும் சட்டவிரோத குழுவை சேர்ந்தவர் எனவும் அடையாளம் கண்டுள்ளோம் மேலும் தாக்குதலுடன் தொடர்புடைய ஆறு பேரை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் சோதனை நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத செயல்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம்.
அதற்காக காவல்துறை விசேட அதிரடிபடையினர் , இராணுவம் , கடற்படை மற்றும் விமான படையின் உதவிகளையும் நாடவுள்ளோம். இதனூடாக குற்ற செயல்களை நாம் மிக விரைவில் கட்டுப்பாட்டுக்குள்கொண்டுவருவோம் என தெரிவித்தார்.
1 comment
காவல்துறையினர் மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்தியவர்களில் பிரதான சந்தேகநபர் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் எனவும், தற்போது ஆவா குழுவுடன் சேர்ந்து இயங்கும் நபர் எனவும் கண்டுபிடித்த காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, யாழில் இமாலய சாதனை ஒன்றை நிகழ்த்தியிருக்கின்றார்?
ஆவா குழு என்பது இன்றோ அன்றி நேற்றோ புதிதாகப் பிறந்ததல்ல! கொலை வாள்கள் மற்றும் கொடுவாக் கத்திகளுடன் கடந்த சில வருடங்களாக இலக்கத் தகடுகளற்ற மோட்டார் சைக்கிள்களில் வந்து பட்டப் பகலில் பொது மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல்களை மேற்கொள்கின்றார்கள். இவர்களை, இலங்கைப் பாதுகாப்புப் படைகளின் வழி நடத்தலில், அமெரிக்க இராணுவம் வந்தாலும் கைது செய்ய முடியாது!
உள்ளங்கைப் புண்ணைப் பார்க்கப் பூதக் கண்ணாடி தேடும் இவர்களுக்கு, ஏதோவொரு காரணத்துக்காக வடக்கில் விசேட அதிரடிபடையினர், இராணுவம், கடற்படை மற்றும் விமான படையினரை நிலைநிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது! ‘தமிழர் தாயகப் பிரதேசம்’, என்ற கருப்பொருளைச் சிதைக்க வேண்டிய தேவை ஆட்சியாளர்களுக்கு நிரம்பவே இருக்கின்றது! அதனைச் செயற்படுத்தும் ஓர் அங்கமாகக் கூட இது இருக்கலாம்!
கருணாவும், பிள்ளையானும், அவர்களின் வழிநடத்தலில் இயங்கிய போராளிகளும் கூட முன்னாள் விடுதலைப் புலிகள்தான்! இவ்வளவு தொகையாக இராணுவம் யாழில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் ஒரு நிலையில், பட்டப் பகலில், அதுவும் இராணுவத் தளபதி யாழ் விஜயம் மேற்கொண்டிருக்கும்போது, நான்கைந்து மோட்டார் சைக்கிள்களில் வந்து பொலிஸாரைத் தாக்கியிருக்கின்றார்களென்றால், அதை பொலிஸாருக்கு எதிரான திட்டமிட்ட ஒரு இராணுவத் சதித் தாக்குதல், என்று சொன்னால் அது தவறாகாது?
யாழ் நீதிபதி மீதான தாக்குதல் குறித்துப் பொலிஸாரைத் தவிர, வடக்கு ஆளுநர், தெற்கு அரசியல் பிரபலங்கள் உட்பட, சகலரும் கூறும் கருத்து ஒன்றாக இருக்க, போலீஸ் மா அதிபர் கூட இதை ஒரு தற்செயலான நிகழ்வாகப் பார்ப்பதன் மர்மம்தான் என்னவென்றே புரியவில்லை?
அப்பாவித் தமிழ் மக்கள் தமது தாய் மண்ணில், இன்னும் என்னென்ன அவலங்களைச் சந்திக்கப் போகின்றார்களோ?