வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குநராக 10 நாட்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட அந்தோனி ஸ்காராமுக்சை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ அலுவலகமான வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு துறையின் இயக்குநராக பணியாற்றிய மைக் டுப்க், ஜனாதிபதியின் நிர்வாகத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் கடந்த மே மாதத்தில் ராஜினாமா செய்தார். இதனால், வெற்றிடமாக இருந்த அப்பொறுப்புக்கு நியூயார்க்கைச் சேர்ந்த நிதியாளர் அந்தோனி ஸ்காராமுக்சை நியமித்து கடந்த 10 நாட்களுக்கு முன்னர் டிரம்ப் உத்தரவிட்டார். டிரம்ப்பின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பு அதிகாரியாக இருந்த சீன் ஸ்பைசர் ராஜினாமா செய்தார். இந்நிலையில், வெள்ளை மாளிகையின் புதிய தலைமை பணியாளராக ஜான் கெல்லி நேற்று பதவியேற்றார்.
ஆனால், ஜான் கெல்லி தலைமை பணியாளராக பொறுப்பேற்றதை ஏற்றுக்கொள்ள முடியாத தகவல் தொடர்பு இயக்குநர் அந்தோனி ஸ்காராமுக்சை தனது பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வெள்ளை மாளிகையின் பல்வேறு முக்கிய அதிகாரிகள் தொடர்ந்து கருத்தொற்றுமை ஏற்படாமல் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதால் அதிபர் டிரம்ப் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.