இளைஞர் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பிரித்தானிய மகாராணியிடம் இருந்து விருது வென்ற இலங்கையர்களான ரகித மாலேவன மற்றும் செனெல் வன்னியாரச்சி ஆகிய இரு இளைஞர்களும் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைச் சந்தித்துள்ளனர்.
இந்த இரு இளைஞர்களும் இலங்கைக்கு பெற்றுத்தந்துள்ள பெருமையை பாராட்டிய ஜனாதிபதி, அவர்களது எதிர்காலத்திற்காக தனது ஆசிகளை தெரிவித்தார்.
பொதுநலவாய நாடுகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 60 இளைஞர்களுக்கு பிரித்தானிய மகாராணியால்இங்கிலாந்து பக்கிங்ஹம் மாளிகையில் விருதுகள் வழங்கப்பட்டன.
இலங்கை அரசியலில் பெண்கள் பிரதிநித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை ஏற்பாடுசெய்தல், இளைஞர்கள் மற்றும் பெண்களை விழிப்பூட்டல், பால் சமத்துவம் மற்றும் சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பில் அறிவூட்டுவதற்காக சமூக ஊடகங்களை பயன்படுத்தல் போன்ற விடயங்களுக்காக செனெல் வன்னியாரச்சிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
2014 ஆம் ஆண்டு இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் இளைஞர் பிரதிநிதியான செனெல் வன்னியாரச்சி கொழும்பு பல்கலைகழகத்தின் சர்வதேச உறவுகள் தொடர்பான விசேட பட்டதாரியாவார்.
அதேவேளை எச்.ஐ.வீ வைரசுக்கான ஒரு மருந்தை கண்டுபிடித்தமைக்காக ரகித மாலேவனவுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
தற்போது கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திலும் கொழும்பு பல்கலைக்கழகத்திலும் வெளி மருத்துவ ஆராய்ச்சியாளராக செயற்பட்டுவரும் ரகித மாலேவன நாலந்தா கல்லூரியில் கல்வி கற்கும் காலப்பகுதியில் எச்.ஐ.வீ தொற்றுக்கான புதியதொரு தடுப்பூசியை கண்டுபிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.