வவுனியா – போகஸ்வௌ பிரதேசத்தைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமியை கடத்தி வன்புணர்வுக்குட்படுத்திய, மதவாச்சி மாமா என அழைக்கப்படும் முத்துபண்டாகே செனரத் அநுர சாந்த சரத்குமார என்ற நபருக்கு, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், 27 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து, இன்று (01) தீர்ப்பளித்துள்ளார்.
2013ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் குறித்த நபரை வவுனியா பொலிஸார் கைதுசெய்து, வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்புத்தியதன் அடிப்படையில், ஆரம்ப வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
இந்தநிலையில் இவ்வாண்டு மார்ச் 16ஆம் திகதி, குறித்த நபருக்கு எதிராக, வவுனியா மேல் நீதிமன்றத்தில், சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியும் சிறுமியின் தாயாரும் சட்ட வைத்திய அதிகாரியும், நீதிமன்றத்தில் சாட்சியமளித்திருந்தனர்.
எதிரிக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுகளும் வழக்கு தொடருநர் தரப்பால் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில், அவரை குற்றவாளியாகக் காண்பதாக, நீதிபதி இன்று (01) தெரிவித்தார்.
இதையடுத்து, குறித்த நபருக்கு எதிரான முதலாவது குற்றச்சாட்டான 16 வயதிலும் குறைந்த பெண் பிள்ளையை, சட்ட ரீதியான பாதுகாவலரிடம் இருந்து கடத்திய குற்றச்சாட்டுக்காக, அதிகபட்சத் தண்டனையாக 7 வருட கடூழியச் சிறைத்தண்டனையை, நீதிபதி விதித்தார்.
இரண்டாவது குற்றச்சாட்டான, 7 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டுக்கு, அதிகபட்ச தண்டனையாக, 20 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 இலட்சம் ரூபாய் நட்டஈட்டைச் செலுத்துமாறும், மேலதிகமாக, தண்டப்பணமாக பத்தாயிரம் ரூபாயைச் செலுத்துமாறும் பணித்தார். நட்டஈட்டைச் செலுத்தத் தவறும் பட்சத்தில், மேலதிகமாக 2 வருட கடூழியச் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டார்.