குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழில் கடமையாற்றும் இரண்டு தமிழ் காவல்துறை உயர்அதிகாரிகளுக்கு இடையில் பனிப்போர் மூண்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது ,
யாழ்.மாவட்டத்தில் தமிழ் காவல்துறை உயர் அதிகாரிகளாக இருவர் ஒரே தரத்தில் கடமையாற்றி வருகின்றார்கள்.
அவர்களுக்கு இடையில் பெரும் பனிப்போர் மூண்டுள்ளது. இருவரும் தற்போது பல இடங்களில் ஒருவரை ஒருவர் கோவத்துடன் பார்த்து செல்கின்றனர். சில இடங்களில் இருவரும் வாய் தர்க்கத்தில் ஈடுபட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் இரு உயர் அதிகாரிகளில் ஒருவர் கோப்பாய் பகுதியில் உள்ள தனியார் தங்குமிடமொன்றில் வாடகைக்கு தங்கியுள்ளார்.
குறித்த தங்குமிடத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்ற மற்றைய அதிகாரி எதற்காக அந்த அதிகாரிக்கு வாடகைக்கு கொடுத்தீர்கள் ? எத்தனை பேருக்கு சாப்பாடு கொடுக்கின்றீர்கள் ? மிகவிரைவில் அந்த அதிகாரியை இந்த இடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என தங்குமிடத்தில் பணியாற்றும் ஊழியர்களை மிரட்டி சென்றுள்ளார்.
குறித்த அதிகாரி மிரட்டி சென்ற சமயம் மற்றைய அதிகாரி தங்குமிடத்தில் இல்லாத காரணத்தால் அந்த அதிகாரி வந்ததும் , ஊழியர்கள் அதிகாரியிடம் முறையிட்டு உள்ளனர். அதற்கு அவர் தான் இந்த மிரட்டல் சம்பவம் தொடர்பில் வடமாகாண சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபரிடம் முறையிடுவதாகவும் , ஊழியர்களை பயப்பட வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் , நேற்றைய தினம் யாழ்ப்பணத்திற்கு விஜயம் மேற்கொண்ட காவல்துறை மா அதிபர் தொடர்பிலான செய்தி சேகரிப்பு பணிக்காக யாழ்.தலைமை காவல் நிலையத்தில் ஊடகவியலாளர்கள் காத்திருந்த வேளை ஒரு தமிழ் காவல்துறை உயர்அதிகாரி , ஊடகங்கள் தன்னுடைய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மற்றவர்களின் செய்திகளுக்கு தான் முன்னுரிமை கொடுக்கின்றது அது ஏன் என தெரியவில்லை என ஊடகவியலாளர்களை கடிந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.