167
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடக்கில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க நினைப்பவர்களின் எண்ணம் ஒரு போதும் ஈடேற அனுமதிக்க மாட்டேன் என காவற்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள குற்றச்செயல்கள், காவற்துறையினர் மீதான தாக்குதல்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் காவற்துறையினர் , இராணுவத்தினர் மற்றும் யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தலைமையில் யாழ் தலைமை காவல் நிலையத்தில் இன்று காலை இடம்பெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
நாட்டில் அமைதி இல்லை, சமாதானம் இல்லை, சட்டம் ஒழுங்கு சீராகஇல்லை என வெளி உலகிற்கு காட்டுவதை இலக்காக கொண்டு சில சிறிய குழுக்கள் இயங்கி சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து வருகின்றது.
அதனை கட்டுப்படுத்த முதல் கட்டமாக ரோந்துப்பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தேவை ஏற்படும் பட்சத்தில் இராணுவத்தினர் கடற்படையினர் வான்படையினர் மற்றும் விசேட அதிரப்படையினரையும் இணைத்து செயற்படுவோம்.
சிவில் பாதுகாப்பு குழு மற்றும் பொது மக்களின் பூரண ஒத்துழைப்பை தாம் இவ்விடயத்தில் எதிர் பார்கின்றோம். குற்றச்செயல்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் குறித்த தாம் அறிந்த தகவல்களை காவற்துறையினருக்கு வழங்க பொதுமக்கள் சிவில் பாதுகாப்பு குழுவினர் முன் வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
பயங்கரவாதம் முளைக்கின்றது.
உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான ஆயுதங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் சமூகத்தில் இன்னமும் இருக்கின்றனர். அவர்களது மனப்பாங்கு இன்னமும் மாறவில்லை. அதனால், நாட்டில் பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. என கூறமுடியாது. பயங்கரவாதம் தற்போது விதைகளில் இருந்து முளைத்துக்கொண்டு தான் இருக்கின்றது.
இவ்வாறு தான் ஆரம்ப காலத்தில் ஆயுதப் போராட்டம் வளர்ந்தது. இதனைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது. என தெரிவித்தார்.
Spread the love
2 comments
இதுக்குத்தான் இவ்வளவு ஆட்டம் ஆடினாங்களா? விடுதலை போராட்டம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லப்படும். எமது ஆயுதங்கள் மௌனிக்கின்றன என்ற தலைவரின் ஒரு சொல்லோடு ஆயுதங்களை கீழே வைத்தவர்கள் மீண்டும் அந்த ஆணையின்றி தூக்கவே மாட்டார்கள் அப்படித்தான் வளர்க்கப்பட்டார்கள் விடுதலைப்புலிகள். அவர்களைக்கொண்டு எதுவும் செய்யமுடியாது என்பதை உணர்ந்த பின், காவாலிகளுக்கு ஆயுதம் கொடுத்து அவர்களை வளர்த்து விட்டது ”விதைகள் மீண்டும் முளைக்கின்றன என்ற கதைக்காகவா?” உண்மையான விதைகள் மீண்டும் முளைத்தால் அதன் விளைவுகைள் எப்படி இருக்கும் என்பது உங்களால் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியாது. களைகள் ஆடும் ஆட்டம் விரைவில் அடங்கும். விதைகள் என்றும் மௌனம் காக்கும் தலைவன் எண்ணம் ஈடேறும்.
‘நாட்டில் அமைதி இல்லை, சமாதானம் இல்லை, சட்டம் ஒழுங்கு சீராகஇல்லை’, எனக் கூறிப் புதிதாக பாதுகாப்புப் படையினரை வடக்கில் கடமைகளில் ஈடுபடுத்தப் போவதாகப் பயமுறுத்தும் போலீஸ் மா அதிபருக்கு, இவற்றையே வெளி உலகிற்கு காட்டுவதை இலக்காக கொண்டு சில சிறிய குழுக்கள் தென்னிலங்கையில் இயங்கி, சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து வருகின்றமை அவர் கண்ணில் படவில்லை போலும்?
விதைகள் சுயம்புவாக உருவாவதுமில்லை, விதைக்காமல் முளைப்பதுமில்லை! ஆட்சியாளர்கள் விதைகளை வழங்காமல்/ விதைக்காமல் பார்த்துக்கொள்வதை விடுத்துச் சினிமா பாணியில் அறிக்கை விடுவது, பேடித்தனமேயன்றி, வீரமல்ல!
பல்லின, பல்மத- மொழிகள் வழக்கத்தில் இருக்கும் நாடுகளில், பொருத்தமான ஆட்சி முறைகளை நிறுவுவதன் மூலம் மட்டுமே உறுதியான ஆட்சியை நிலைநிறுத்த முடியும்! அடக்குமுறைகள் மூலம் எந்தவொரு நாடும் நிலையான சமாதானத்தை எட்டியதில்லை! சிந்திப்பார்களா?