குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு சுமார் 210 மில்லியன் யூரோக்களை வழங்குவதாக உறுதிமொழி வழங்கியுள்ளது. 2020ம் ஆண்டு வரையிலான அபிவிருத்திப் பணிகளுக்காக இவ்வாறு உதவிகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2007ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையில் இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திடம் பெற்றுக்கொண்ட உதவிகளை விடவும் இந்த தொகை இரண்டு மடங்கு அதிகமானது என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
தற்போது பெல்ஜியத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐரோப்பிய ஒன்றிய முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்தி, மீள்குடியேற்றம் மற்றும் இடம்பெயர் மக்களுக்கான உதவிகளுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவி பயன்படுத்திக்கொள்ளப்பட உள்ளது. கடந்த 21 மாதங்களாக இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டு வெளியிட்டுள்ளது.