தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தி 18 சதவீதம் குறைந்துள்ளது – கனிமொழியின் கேள்விக்கு அலுவாலியா பதில்:-
பாராளுமன்ற மாநிலங்களவையில் தமிழக விவசாயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எழுத்துபூர்வமாக கேட்ட கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் அலுவாலியா பதில் அளித்துள்ளார்.
கனிமொழி கேள்வி:– “கடந்த வருடம் தமிழ் நாடு மிக மோசமான வறட்சியை சந்தித்திருக்கிறது.விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசு செய்த உதவிகளின் விவரங்கள் என்ன? 2016-ம் ஆண்டு ரபி பருவத்தில் தமிழக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்க் காப்பீட்டுத் தொகை எவ்வளவு?”
மத்திய மந்திரி எஸ்.எஸ். அலுவாலியா:- ‘வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதி, தேசிய பேரிடர் நிவாரண நிதி ஆகியவற்றில் இருந்து உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் விதிகளுக்கு உட்பட்டு 33 சதவிகிதம் அல்லது அதற்கும் மேல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டிருக்கிறது. 2016-17-ம் ஆண்டில் தமிழ்நாட்டு விவசாயிகளுக்காக 1748.28 கோடி ரூபாய் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழக அரசுக்கு வழங்க ஒப்புதல் ஆகியிருக்கிறது. இதில் ஐம்பது சதவிகிதம் மாநில பேரிடர் நிவாரண நிதியத்தில் வரவு வைக்க வேண்டியுள்ளது. 2016-ம் ஆண்டு ரபி பருவத்தில் தமிழக விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகையாக 1,21,326.09 லட்ச ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது’’.
கனிமொழி:- “தமிழகத்தில் 2016-17-ம் ஆண்டில் வேளாண் பயிர் விதைப்பு முந்திய வருடத்தை விட 29 சதவிகிதம் குறைந்துவிட்டது என்று புள்ளி விவரங்கள் தெரிவிப்பது உண்மையா? உண்மை என்றால் தமிழ்நாட்டில் பயிர் விதைப்பை அதிகரிக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?”
எஸ்.எஸ். அலுவாலியா:- “பருவ மழை பொய்த்ததன் காரணமாக 2015-16-ம் ஆண்டை விட 16-17-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 18 சதவிகிதம் பயிர் உற்பத்தி குறைந்துள்ளது.
தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பயிர் சாகுபடியை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உணவுப் பாதுகாப்பு இயக்கம், ராஷ்டிரிய க்ரிஸ் விகாஸ் யோஜனா, பிரதமமந்திரி கிரிஷி சஞ்சாயி யோஜனா போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கனிமொழி:- “தமிழக விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்யக்கோரி தமிழ்நாடு அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு முறைப்படி கோரிக்கை வந்துள்ளதா? அதன் மீது மத்திய அரசு ஏதேனும் முடிவெடுத்திருக்கிறதா?”
இதற்கு நிதித்துறை இணை அமைச்சகம் எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளது. அதில், “தமிழக விவசாயிகளின் பயிர்கடனை தள்ளுபடி செய்வது குறித்து தமிழக அரசிடம் இருந்து முறையீடுகள் வந்துள்ளன. ஆனால், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வது குறித்த எந்த ஒரு திட்டமும் அரசின் பரிசீலனையில் இல்லை என அந்த கேள்வி-பதிலில் இடம் பெற்றுள்ளது.