152
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் மரபணு பரிசோதனைகள் சந்தேக நபர்களுடன் ஒத்து போகவில்லை என ஜின்டேக் நிறுவனத்தின் சிரேஸ்ட விஞ்ஞானி மன்றில் சாட்சியம் அளித்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணை இன்று வியாழக்கிழமை யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்கம் ( ரயலட் பார் ) முறைமையில் நடைபெற்றது.
அதன் போது , குறித்த வழக்கின் 53ஆவது சாட்சியமான ஜின்டெக் நிறுவனத்தின் சிரேஸ்ட விஞ்ஞானி றுவான் இளையபெருமா சாட்சியமளிக்கையில் ,
மரபணு பரிசோதனைக்காக சான்று பொருட்கள் அனுப்பப்பட்டன.
நான் கடந்த 15 வருடங்களாக ஜின்டெக் நிறுவனத்தில் கடமையாற்றுகிறேன். மரபணு (DNA) பரிசோதனைகள் 4600க்கும் மேல் செய்துள்ளேன். 100க்கும் மேற்பட்ட தடவைகள் நீதிமன்றங்களில் மரபணு(DNA) பரிசோதனைகள் தொடர்பில் சாட்சியங்கள் அளித்துள்ளேன்.
குறித்த வழக்கு தொடர்பில் எமது நிறுவனத்திற்கு மூன்று தடவைகள் சான்று பொருட்கள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு இருந்தன.
முதலாவதாக அரச பகுப்பாய்வு திணைக்கள முத்திரையிடப்பட்ட பொதி ஒன்றில் 2CM, 1.5CM, 5CM , 5CM, 6CM மற்றும் 1CM நீளமுடைய உரோம துண்டுகள் 6 அனுப்பப்பட்டு இருந்தன. அத்துடன் பெண்கள் அணியும் உள்ளாடை ஒன்றும் , பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம்
ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம் சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது சந்தேக நபர்களினதும் இரத்த மாதிரிகளும் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
இரண்டாவதாக ஒரு கண்ணாடி போத்தலில் அடைக்கப்பட்ட இரு மண்ணிற துண்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன. இவை இரண்டையும் பொலிஸ் பரிசோதகர் சம்பத் ராஜ கருணா என்பவரே எம்மிடம் பாரம் தந்தார்.
மூன்றாவதாக சட்ட வைத்திய அதிகாரியினால் உயிரிழந்த மாணவியின் தயாரான சிவலோகநாதன் சரஸ்வதியின் இரத்த மாதிரி அனுப்பி வைக்கப்பட்டது.
எமக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது உரோம துண்டுகளே , அதனை ஏன் அவ்வாறு சொல்லுகிறேன் என்றால் , உரோமம் என்றால் அது முழுமையாக அதன் வேர்களுடன் இருக்க வேண்டும். ஆனால் எமக்கு அனுப்பி வைக்கப்பட்டவை , துண்டுகளாகவே காணப்பட்டன. அவற்றில் வேர்கள் காணப்படவில்லை. எனவே அவை வெட்டப்பட்ட அல்லது பிடுங்கி எடுக்கப்பட்ட துண்டுகளாக இருப்பதனால் , அதனை உரோம துண்டுகள் என்றே சொல்லுவோம்.
சான்று பொருட்களில் மரபணு பெறுபேறுகளை பெற முடியவில்லை.
மனித கலங்களில் காணப்படும் மரபணுக்களை பரிசோதனை செய்து அடையாளம் காண முடியும். அந்த வகையில் நாம் உரோம துண்டுகளை பரிசோதனை செய்த போது அதில் வேர்கள் இல்லாமையினால் பெறுபேறுகளை பெறமுடியவில்லை.
உள்ளாடையில் இருந்த இரு கறைகளை பரிசோதனை செய்த போதிலும் அதில் இருந்தும் பெறுபேறுகளை பெற முடியவில்லை.
கண்ணாடி போத்தலில் இருந்த இரு துண்டுகளை பரிசோதனை செய்த போது அதில் 4MM நீளமுடைய உரோம துண்டு ஒன்றினை கண்டோம். அவற்றை பரிசோதனை செய்தும் பெறுபேறுகளை அடைய முடியவில்லை.
அடுத்ததாக சந்தேக நபர்கள் ஒன்பது பேரினதும் இரத்த மாதிரிகளையும், உயிரிழந்த மாணவியின் தாயாரின் இரத்த மாதிரியையும் பரிசோதனைக்கு உட்படுத்தினோம்.
நாம் முதலில் 6 உரோம துண்டுகள், உள்ளாடையில் இருந்த இரண்டு கறைகள், இரண்டு துண்டுகள் ஆகியவற்றை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்திய போதிலும் அதில் இருந்து மரபணு பெறுபேறுகளை பெற முடியவில்லை. அதற்கு காரணம் சான்று பொருட்களில் இருந்த மரபணுக்கள் அழிந்து போனமையே ..
அதி தொழினுட்பம் வாய்ந்த தொழிநுட்ப கருவிகளை பயன்படுத்தி பரிசோதனை.
அதன் பின்னர் நாம் எம்மிடம் இருந்த அதி தொழினுட்பம் வாய்ந்த தொழிநுட்ப கருவிகளை பயன்படுத்தி பரிசோதனைகளை மேற்கொண்டோம். அதனூடாக 6 உரோம துண்டுகளில் மூன்று உரோம துண்டுகளையும் , கண்ணாடி போத்தலில் அனுப்பப்பட்ட மண்ணிற துண்டுகள் இரண்டில் ஒன்றில் இருந்து பெறுபேறுகளை பெற்றோம்.
மரபணுக்கள் அழிவடைய கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு அதற்கு சூழல் காரணிகள் காரணமாகலாம். அதிக வெப்பம் , அதிக ஈரப்பதம் ஆகியனவும் காரணமாக இருக்கலாம். உடலில் இருந்து அகறப்பட்ட பின்னர் மரபணுக்கள் அழிவடைந்து போக கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. என தெரிவித்தார்.
கண்ணுக்கு தெரியாத சான்றுகளையும் பரிசோதித்தோம்.
அதிநுட்பமான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா ? என அதன் போது மன்று கேள்வி எழுப்பி இருந்தது. அதற்கு ஆம். கண்ணுக்கு தெரியாத சான்றுகள் கூட நுணுக்கு காட்டி ஊடாக பரிசோதிக்கப்பட்டது என சாட்சி அளித்தவர் பதிலளித்தார்.
குற்றசம்பவம் நடைபெற்றது மே மாதம் உங்களுக்கு இந்த சான்று பொருட்கள் அனுப்பப்பட்டது செப்ரெம்பர் மாதம். இந்த சான்று பொருட்களை விரைவாக அனுப்பி இருந்தால் பரிசோதனையில் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்குமா ? என மன்று கேள்வி எழுப்பியது.
அதற்கு, சிலவேளைகளில் பரிசோதனையில் அறிக்கையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கும் என பதிலளித்தார்,
மரபணுக்கள் ஒத்துபோகவில்லை.
அதனை தொடர்ந்து சாட்சியாளர் தொடர்ந்து சாட்சியம் அளிக்கையில் , எம்மால் பெறுபேறுகளை பெற முடிந்த 3 உரோம துண்டுகள் மற்றும் ஒரு மண்ணிற துண்டு என்பவற்றின் மரபணுக்களும், மகாலிங்கம் சசிதரன், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்த், பழனி ரூபசிங்கம் குகநாதன், ஜெயதரன் கோகிலன், மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய 6 சந்தேக நபர்களின் மரபணுக்களுடன் ஒத்துபோகவில்லை.
முதல் மூன்று சந்தேகநபர்களான பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம்
ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார் ஆகிய மூவரும் ஒரு தாய் பிள்ளைகள் என்பதனை அறிந்து கொண்டோம்.
முதல் மூன்று சந்தேக நபர்களும் மாணவியின் தாயும் , தாய் வழி உறவினர்கள் ?
அத்துடன் 3 உரோம துண்டுகள் மற்றும் ஒரு மண்ணிற துண்டு என்பவற்றின் மரபணுக்களும் உயிரிழந்த மாணவியி னதும் உயிரிழந்த மாணவியின் தாய் மற்றும் பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெ யக்குமார், பூபாலசிங்கம் தவக்கு மார்
ஆகியோரின் மரபணுக்களும் ஒத்து போகின்றது.
ஆகவே முதல் மூன்று சந்தேக நபர்களும் உயிரிழந்த மாணவியின் தாயும், தாய் வழி உறவினர்களாக இருக்கலாம் என்பதனையும் அறிந்து கொண்டோம். என சாட்சியம் அளித்தார். அதனை அடுத்து குறித்த சாட்சியம் முடிவுறுத்தப்பட்ட , சாட்சி மன்றினால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது.
மூக்கு கண்ணாடியினை மீட்கும் போது பார்த்தேன்.
அதனை தொடர்ந்து குறித்த வழக்கின் 11ஆவது சாட்சியமான அந்தோனிப்பிள்ளை சாட்சியமளிக்கையில் ,
புங்குடுதீவில் நான் வசித்து வருகிறேன். பெரியாம்பி (சிவதேவன் துஷாந்த்) வீட்டுக்கு அருகில் தான் என்னுடைய வீடும் உள்ளது. ஒரு நாள் எனது வீட்டில் நான் நின்றிருந்த போது குற்றப்புலனாய்வு துறையினர் பெரியாம்பி வீட்டில் நின்று வேலிக்கு மேலால் எட்டி என்னை அழைத்து ஏணி இருக்கா என கேட்டனர்.
நான் ஓம் என்று சொல்லி வீட்டில் இருந்த ஏணியை வேலிக்கு மேலால் தூக்கி அவர்களிடம் கொடுத்தேன். அதனை அவர்கள் வாங்கி கொண்டு என்னையும் பெரியாம்பி வீட்டுக்கு வருமாறு அழைத்தனர்.
ஏணியை அவர்களிடம் வேலிக்கு மேலால் கொடுத்து விட்டு , நான் வாசல் வழியாக சுற்றி பெரியாம்பி வீட்டுக்கு போனேன். அப்போது பெரியாம்பியையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் அழைத்து வந்திருந்தனர். பெரியாம்பி வீடு குற்ற சம்பவம் இடம்பெற்று சில நாட்களில் சிலரால் எரிக்கப்பட்டது. அதனால் பயத்தில் பெரியாம்பி வீட்டில் ஒருவரும் இருப்பதில்லை. அன்றைய தினமும் ஒருவரும் வீட்டில் இருக்கவில்லை.
நான் நிற்கும் போது தான் பெரியாம்பி வீட்டின் பின்பக்கமாக ஒரு மூலையில் மலசல கூடம் உள்ளது. அதற்கு பக்கத்தில் மேல்பக்கமாக இருந்த கொங்கிரீட் பிளாட் ஒன்றில் ஏணியை சாற்றி விட்டு ஒருவர் ஏறி மேலே பிளாட்டில் துணியினால் சுற்றப்பட்ட பொட்டலம் (பொதி) ஒன்றினை எடுத்துக்கொண்டு கீழே வந்தார்.
கீழே நான் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே அந்த பொதியினை பிரித்தார்கள். அது வெளிப்புறம் ரோஸ் கலர் பியாம துணியால் சுற்றப்பட்டு இருந்தது. உள்ளே ஒரு பொருள் கடதாசி ஒன்றில் சுற்றிய நிலையில் இருந்தது. அதனை பிரித்து பார்த்த போது உள்ளே மூக்கு கண்ணாடி ஒன்று இருந்தது. என சாட்சியம் அளித்தார்.
சான்று பொருளை மன்றில் அடையாளம் காட்டினார்.
அதன் போது அவற்றை மன்றில் அடையாளம் காட்ட முடியுமா ? என பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் கேட்ட போது , அதற்கு சாட்சி ஆம் என கூறினார்.
அதனை அடுத்து சான்று பொருட்கள் சாட்சிக்கு காட்டபட்டது. அதன் போது பொதி சுற்றப்பட்டு இருந்ததாக பெண்களின் பியாம சான்று பொருளாக காட்டப்பட்டது. அதனை பார்த்த சாட்சி இந்த துணியில்லை அது ரோஸ் கலர் பியாம இது அந்த பியாம இல்லை என தெரிவித்தார்.
அதன் பின்னர் மூக்கு கண்ணாடி சுற்றப்பட்ட சொப்பின் பையினை சாட்சிக்கு அடையாளம் காட்ட மன்றில் காட்டபப்ட்டது. அதனை பார்வையிட்ட சாட்சி இது சொப்பின் பை , மூக்கு கண்ணாடி சுற்றப்பட்டு இருந்தது கடதாசி தாள் என கூறினார்.
சாட்சிக்கு மன்று எச்சரிக்கை.
அதனை அடுத்து மன்று அந்த சொப்பின் பையை பரிசோதித்த போது , அதில் சாட்சியம் அளிப்பவரின் கையொப்பம் இருப்பதனை அவதானித்து கையொப்பம் குறித்து வினாவியது. அதன் போது அந்த சொப்பின் பையின் மேல் உள்ள கையொப்பம் தன்னுடையது தான் என சாட்சியாளர் தெரிவித்தார். அதனை அடுத்து மன்று அவரை கடுமையாக எச்சரித்தது. அதன் போது சாட்சியாளர் தான் அன்றைய தினம் கையொப்பம் வைத்தது கடதாசி தாள் போன்றே ஞாபகம் இருந்ததாக தெரிவித்தார்.
அதை தொடர்ந்து சாட்சியாளருக்கு மூக்கு கண்ணாடியினை அடையாளம் காட்ட முடியுமா என பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் கேட்ட போது ஆம். அந்த கண்ணாடியின் சட்டகம் (பிரேம்) கறுப்பு நிறம் என கூறினார். அதை அடுத்து சாட்சியாளருக்கு மூக்கு கண்ணாடி காட்டப்பட்டது. அதனை அவர் அடையாளம் காட்டினார்.
அதனை தொடர்ந்து அவரது சாட்சியம் முடிவுறுத்தப்பட்டு சாட்சி மன்றினால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
வழக்கு தொடுனர் தரப்பு சாட்சியங்கள் முடிவுறுத்தப்பட்டன.
அதையடுத்து பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் , வழக்கு தொடுனர் தரப்பு சாட்சி விசாரணைகளை முடிவுறுத்துவதாகவும் வ – 01 தொடக்கம் வ – 27 வரையிலான சான்று பொருட்களை வழக்கில் இணைத்துக்கொள்வதாகவும் மன்றில் விண்ணப்பம் செய்தார்.
எதிரிதரப்பு சாட்சியங்களுக்கு உத்தரவு.
அதனை அடுத்து , வழக்கு தொடுனர் தரப்பு சாட்சியங்கள் முடிவுறுத்தப்பட்டு உள்ளதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் மன்றில் விண்ணப்பம் செய்துள்ளார். ஒன்பது எதிரிகளுக்கும் எதிரான சாட்சியங்கள் மன்றில் எய்ம்பிக்க பட்டுள்ளது. என தெரிவித்து , மன்று எதிரி தரப்பு சாட்சியங்களுக்கு உத்தரவு இட்டது.
எதிரிகள் 9 பேரும் தனித்தனியாக சாட்சி கூண்டில் ஏறி சத்தியம் செய்து அல்லது உறுதி செய்து சாட்சியம் அளிக்க முடியும். அதன் போது அவர்கள் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
அல்லது எதிரிகள் 9 பேரும் எதிரி கூண்டில் நின்று கூண்டு வாக்கு மூலம் அளிக்க முடியும். அதன் போது அவர்கள் சத்தியம் செய்யவோ , உறுதி எடுக்கவோ தேவையில்லை. அத்துடன் அவர்களிடம் குறுக்கு விசாரணையும் மேற்கொள்ளப்படமாட்டாது.
அல்லது 9 பேரும் மௌனமாக இருக்க விரும்பின் இருக்கலாம். அல்லது தமது தரப்பில் சாட்சியங்களை மன்றில் முற்படுத்தி சாட்சியங்களை நெறிப்படுத்த முடியும் என சந்தேக நபர்களுக்கு மன்று அறிவுறுத்தியது.
10 நிமிடம் விசாரணை ஒத்திவைப்பு.
அதை தொடர்ந்து மன்று சந்தேக நபர்கள் அது தொடர்பில் ஆலோசிக்க 10 நிமிட கால அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தது.
அதன் பின்னர் மீண்டும் மன்று வழக்கு விசாரணைக்காக கூடிய போது , எதிரிகள் தமது தரப்பில் சாட்சியங்களை நெறிப்படுத்த போவதாக எதிரி தரப்பு சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்தனர். அத்துடன் , அதற்கு கால அவகாசம் வேண்டும் எனவும் மன்றில் கோரினார்கள்.
அதற்கு மன்று அனுமதித்தது. எதிரி தரப்பு சாட்சியங்கள் தொடர்பில் வழக்கு தொடுனர் தரப்புக்கு அறிவித்து அது தொடர்பில் மன்றுக்கு எதிர்வரும் 11ஆம் திகதிக்கு முன்னர் கோவையிடப்பட வேண்டும். என மன்று உத்தரவு இட்டது.
அதேவேளை வழக்கு தொடுனர் தரப்பு வழக்கில் திருத்தங்கள் செய்ய வேண்டுமாயின் எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்க வேண்டும் எனவும் மன்று உத்தரவு இட்டது.
எதிரி தரப்பு சாட்சி பதிவுக்காக 28ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைப்பு.
அதனை தொடர்ந்து எதிரி தரப்பு சாட்சி பதிவுகளுக்காக எதிர்வரும் 28ஆம் , 29ஆம் ,மற்றும் 30ஆம் திகதிகளிலும் , செப்ரெம்பர் மாதம் 4ஆம் , 11ஆம் , 12ஆம் , 13ஆம் , 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகள் மன்றினால் திகதியிடப்பட்டுள்ளது.
அதையடுத்து எதிர்வரும் 28ஆம் திகதிக்கு வழக்கினை ஒத்திவைத்த மன்று அதுவரையில் சந்தேக நபர்களை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டது.
அதேவேளை குறித்த வழக்கின் எதிரிகள் ஒன்பது பேரினதும் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.குறிப்பிடத்தக்கது.
Spread the love