குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ் வடமராட்சி துன்னாலை பகுதியில் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து காவல்துறையினர் விசேட சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டதுடன் வன்முறைச்சம்பவங்களுடன் தொடர்புடைய மூவரை கைது செய்துள்ளனர்.
கடந்த மாதம் 09ம் திகதி சட்டவிரோத மணல் கடத்தல்காரர்கள் மீது காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிபிரயோகத்தில் வடமராட்சி துன்னாலை குடவத்தை பகுதியைச்சேர்ந்த 24 வயதுடைய யோகராசா தினேஸ் என்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
இதை தொடர்ந்து குறித்த பகுதிமக்கள் காவல்துறையினருக்கெதிராக ஆர்பாட்டத்தை மேற்கொண்டவேளை அவர்களில் சிலரால் அப்பகுதியிலிருந்த காவல்துறையினரின் காவலரண் தாக்கி சேதப்படுத்தியிருந்தனர்.
மேலும் வீதிகளில் ரயர்கள் எரிக்கப்பட்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டது மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
குறித்த குற்றச்சாட்டுக்களை அடிப்படையாக கொண்டு இன்று காலை இந்த சுத்திவளைப்பை விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து பொலிசார் மேற்கொண்டதுடன் குற்றச்செயல்களில் ஈடுபட்ட குறித்த பகுதியைச்சேர்ந்த மூவரை கைது செய்தனர்.
அத்துடன் உரிய அனுமதிப்பத்திரம் இன்றி வீடுகளில் வைக்கப்பட்டிருந்த ஆறு மணல் ஏற்றும் வாகனம், பத்து மோட்டார் சைக்கிள்களையும் பொலிசார் கைப்பற்றியதுடன் உரிய அனுமதிப்பத்திரங்களை காண்பித்து அவற்றை பெற்றுச்செல்லுமாறும் மக்களை அறிவுறுத்திச்சென்றனர்.
கைது செய்யப்பட்டவர்களை உரிய விசாரணையின்பின்னர் தகுந்த ஆதாரங்களுடன் நீதிமன்றில் முற்படுத்தப்போவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
யாழ், துன்னாலைப் பகுதியில் விசேட அதிரடிப் படையினரும், காவல்துறையினரும் இணைந்து சோதனை:-
Aug 5, 2017 @ 04:22
யாழ்ப்பாணம், துன்னாலைப் பகுதியில் விசேட அதிரடிப் படையினரும், காவல்துறையினரும் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை முதல் அந்தப் பகுதியிலுள்ள வீடுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் சட்டவிரோதமாக மணல் அகழச் சென்றவர்கள் மீது காவல்துறையினர் Nமுற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, துன்னாலைப் பகுதியில் அமைந்திருந்த காவல்துறையினரின் காவலரன் பொது மக்களால் அடித்து நொருக்கப்பட்டு தீயிட்டுக் கொழுத்தப்பட்டது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்காகவே இன்று காலை அந்தப் பகுதி சுற்றிவளைக்கப்பட்டதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் சந்தேகநபர்கள் எவரும் இதன்போது கைது செய்யப்படவில்லை எனவும் குறித்த செய்திகள் தெரிவிக்கின்றன