“பதவி, பட்டங்களை நான் ஒரு போதும் விரும்பியதில்லை. தமிழினத்தின் விடுதலையே எமக்கு வேண்டும். அந்த விடுதலைக்காக என்னை அர்ப்பணித்துச் செயற்படுகிறேன்” என்று, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
13ஆவது சர்வதேச மாநாட்டின் இரண்டாம் நிகழ்வு, யாழ். டில்கோ விருந்தினர் விடுதியில், நேற்று (06) நடைபெற்றது. இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
“நாம் பண்பாடுள்ளவர்களாகவும், நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ வேண்டும் என்பதற்காகவே, பல இலட்சக்கணக்கான உயிர்களை எமது இனம் பறிகொடுத்தது. இதற்காகத்தான் இன்றும் போராடிக் கொண்டிருக்கிறோம். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்ள வேண்டும்.
“எமது இனத்துக்காக, எமது வாழ்வு பேராட்டமாகவே காணப்படுகிறது. அதாவது போராட்டப் பாதையில் காலடி எடுத்து வைத்தவர்கள் நாம், என்னுடைய வாழ்வு முழுவதும் போராட்டம் தான். அத்தகைய அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறோம்” என்றார்.
இதேவேளை, “தென்னிலங்கையிலுள்ள தீவிரவாத போக்குடைய சக்திகள், தமிழரசுக் கட்சியைத் தடை செய்ய வேண்டும் என்று வழக்குப் போட்டார்கள். ஆனால், அதில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். தமிழரசுக் கட்சி, சமஷ்டிக் கோரிக்கையை வலியுறுத்தி வருகின்ற போது சமஷ்டி என்றால் பிரிவு, நாட்டைப் பிரித்துவிடும் என மூடத்தனமாக, தெற்கிலுள்ள தீவிரப் போக்குடையவர்கள் கருதுகின்றனர். அதுவே எமக்கு இப்பொழுது பல வழிகளிலும் தடையாக இருக்கிறது. இருந்தும் சமஷ்டி நாட்டைப் பிரித்து விடாது என்று, உயர் நீதிமன்றம், நல்லதொரு தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆகவே, இதைப் பயன்படுத்திக் கொண்டு, நாம் எமது கொள்கையின் அடிப்படையில் தொடர்ந்தும் பயணிப்போம்” எனவும் தெரிவித்தார்.
1 comment
வட மாகாண முதலமைச்சர் பதவியை விரும்பி எடுக்க முயற்சித்தீர்கள். உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கத்தினால் வழங்கப்பட்ட பட்டத்தை ஏற்றுக் கொண்டீர்கள். உங்கள் 75 வது பிறந்த நாளை ஒரு பெரிய அளவில், இந்த வருடம் தமிழ் நாட்டில் கொண்டாட திட்டமிட்டுள்ளீர்கள். நீங்கள் அங்கும் பட்டங்களை ஏற்றுக்கொள்வீர்கள். இதற்கு பிறகு பதவி, பட்டங்களை நான் ஒரு போதும் விரும்பியதில்லை என்று எப்படி சொல்ல முடியும்?