இரணைமடுக் குளத்தின் கீழான சிறுபோக நெற்செய்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டது. உரிய காலத்தில் மழை வீழ்ச்சி இடம் பெறாமையே நெருக்கடிகளை உருவாக்கி விட்டதாக கிளிநொச்சி பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் நவரத்தினம் சுதாகரன் தெரிவித்தார்.
சிறுபோக நெற்செய்கை தொடர்பாக விவசாயிகளுக்கான கூட்டத்தினை நடாத்தி விவசாயிகளிடம் இருந்து கருத்துகளைப் பெற்று 900 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதென முடிவு எடுக்கப்பட்டது.
கூட்டம் நடாத்தும் போது குளத்தில் பத்தடி நீர் இருந்தது. உண்மையில் இந்நீர் மட்டத்தினை வைத்து சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ள முடியாது. ஆனால் அவ்வாறு செய்யாது விட்டால் இவ்வாண்டு காலபோகத்திற்கான விதை நெல்லிற்கு நெருக்கடிகளை விவசாயிகள் எதிர்கொள்வார்கள் என்ற அடிப்படையில் மாவட்டச் செயலாளருடன் கலந்துரையாடி 900 ஏக்கரில் விதை நெல்லிற்கான நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது.
சிறுபோக நெற்செய்கைக் கூட்டத்தில் மழை வீழ்ச்சியினை முற்றிலுமாக எதிர்பார்த்தோம். ஆனால் மழை வீழ்ச்சி இடம் பெறவில்லை. இருந்த போதிலும் குளத்தில் உள்ள நீரை விவசாயிகள் மனித வலு, இயந்திர வலு என்பவற்றைப் பயன்படுத்தி சேறினை அகற்றியதன் மூலம் மெதுவாக நீர்ப் பாயத் தொடங்கியது. இந்நீர் விநியோகம் வேகமாக இடம் பெறவில்லை. இருந்த போதிலும் தற்போது ஏற்பட்டுள்ள மழை வீழ்ச்சி காரணமாக பத்து நாட்களுக்கு நெற்பயிருக்கு நீர்ப் பிரச்சனை இல்லை. சிறுபோக நெல் காப்பாற்றப்பட்டுள்ளது.
சில விவசாயிகளிடையே ஒற்றுமையீனம் காணப்படுவதன் காரணமாக அதிகாரிகளையும் கமக்கார அமைப்புகளின் நிர்வாகங்களையும் குறை கூறுகின்றார்கள். அவையே ஊடகங்களில் செய்தியாகவும் வெளிவருகின்றன. நாடு தழுவிய ரீதியில் வரட்சி ஏற்பட்டு இருப்பது எல்லோருக்கும் தெரியும். எனவே விவசாயிகள் வறட்சி நிலவரத்தினைப் புரிந்துகொண்டு ஒற்றுமையுடன் பயிர்ச் செய்கையில் ஈடுபட வேண்டும். குறை காண்பவர்கள் வறட்சியில் நடைபெற்ற வேலைத் திட்டங்களில் கூட பங்கு கொண்டவர்களாகத் தெரியவில்லை. அதிகாரிகளாகிய நாம் விவசாயிகளை ஒற்றுமைப்படுத்தி சிறப்பான சிறுபோக நெற்செய்கைக்கான ஒத்துழைப்புகளை மேற்கொண்டு வருகின்றோம். குறைகளை மட்டும் கதைத்துக் கொண்டிருப்பதால் சிறப்பான பயிர்ச் செய்கையினை தடுத்து விட முடியாது எனவும் விவசாயிகளின் ஒற்றுமையில்தான் எதிர்கால பயிர்ச் செய்கைகளும் சிறப்பாக அமையும் எனவும் தெரிவித்தார்.