குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
தமக்கு எதிரான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு முன்னாள் சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க கோரிக்கை முன்வைத்துள்ளார். பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலை தொடர்பில் அனுர சேனாநாயக்க கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பிரிஸ் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்டியின் முன்னாள் காவல் நிலையப் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோரின் விளக்க மறியல் காலம் எதிர்வரும் 2ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அனுர சேனாநாயக்கவை மீளவும் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, அண்மையில் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியில் மீட்கப்பட்ட உடற் பாகங்களை, ஜீன்டெக் நிறுவனத்திடம் ஒப்படைத்து மரபணு சோதனை நடாத்தவும் நீதிமன்றம், குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு அனுமதி வழங்கியுள்ளது.