குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மயானங்கள் குடிமனைகளுக்கு மத்தியில் வரவில்லை. மயானங்களை சூழ தான் குடிமனைகள் வந்துள்ளன என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் இன்றைய அமர்வின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
யாழ்.சிறுப்பிட்டி கிந்துசிட்டி மயானம் அகற்றப்பட வேண்டும் என மயானத்தை சூழவுள்ள குடியிருப்பாளர்கள் மாகாண சபையின் பொதுமக்கள் முறைப்பாட்டு குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த மாயானம் தொடர்பிலான பிரச்சனை சட்ட நடவடிக்கை மற்றும் நிர்வாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதனால் மாகாண சபையின் முறைப்பாட்டு குழு அது தொடர்பில் தலையீடு செய்வதில்லை என முடிவெடுத்து உள்ளது.
இருந்த போதிலும் வடக்கில் மயானங்களை சூழவுள்ள 200 மீற்றர் தூரத்திற்குள் கட்டடங்கள் மற்றும் குடியிருப்புக்களுக்கு உள்ளூராட்சி சபைகள் அனுமதி வழங்க கூடாது. அதற்கு உள்ளூராட்சி அமைச்சரான முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மயானங்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் வரவில்லை. மயானங்கள் சூழவுள்ள பகுதிகளில் தான் குடியிருப்பாளர்கள் குடியேறியுள்ளார்கள். அவ்வாறு குடியேறியவர்களின் சுகாதார நலன்கள் தொடர்பில் நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும். என மேலும் தெரிவித்தார்.