ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்தினால் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள நிலத்தடி நீருக்கும், மண்ணின் வளத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று கடற்கரை ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கும், தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டத்துக்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
எனினும் மத்திய அரசும், அந்த திட்டத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் தங்கள் திட்டத்தால் நிலத்தடி நீருக்கும், மண் வளத்துக்கும் விவசாயத்துக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்து வருகின்றன.
இந்தநிலையில் சென்னையில் உள்ள கடற்கரை ஆராய்ச்சி மையம் டெல்டா பகுதிகளான தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கதிராமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மண், நீர் ஆகியவற்றின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு மேற்கொண்டது.
4 மண் மாதிரிகள், 2 நீர்மாதிரிகள், ஒரு நிலத்தடி நீர் மாதிரி ஆகிய மொத்தம் 7 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வில் ஓஎன்ஜிசியும், சிபிசிஎல் நிறுவனமும் டெல்டா பகுதிகளில் மேற்கொண்டு வரும் ஹைட்ரோகார்பன் நடவடிக்கைகளால் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஹைட்ரோ கார்பனுடன் தொடர்புடைய எண்ணெய் பிரித்தெடுத்தல், சுத்திகரித்தல் ஆகிய பணிகளால் 7 மாதிரிகளும் மாசடைந்து காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.