182
சுன்னாகத்தில் கைது செய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் இருந்த வேளை சிறிஸ்கந்தராசா சுமணன் என்ற இளைஞனை சித்திரவதை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் சட்டமா அதிபரின் சார்பில் தெரிவிக்கப்பட்ட கடும் ஆட்சேபணையையடுத்து, இந்த வழக்கில் சட்டமா அதிபரினால் குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்றத்ததில் முன்னிலையாகியிருந்த 7 பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் பிணை மனு யாழ் மேல் நீதிமன்றத்தினால் புதன்கிழமை நிராகரிக்கப்பட்டது.
வெளிநாட்டுக்கு; சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு எதிராக பிடி விறாந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளவர்களில் 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மறியற்சாலையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். இரண்டு எதிரிகளுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. ஒருவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார். மற்றுமொருவர் வெளிநாடு சென்றுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இவர்களில் மூவர் தமிழ் உத்தியோகத்தர்களாவர். கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிந்தக்க பண்டார முதல் எதிரியாகக் குறிப்பிடப்பட்டிருந்தார்.
பொலிஸ் உத்தியோகத்தர்களான திசாநாயக்க முதியான்சலாகே சந்தக்க நிசாந்த பிரிய பண்டார, ஞானலிங்கம் மயூரன், பத்திநாதன் தேவதயாளன், ராஜபக்ச முதியான்சலாகே சஞ்சீவ ராஜபக்ச, கோன் கலகே ஜயந்த, வீரசிங்க தொரயலாகே ஹேமச்சந்திர வீரசிங்க, விஜயரட்னம் கோபி கிருஷ்ணன், முனுகொட ஹேவகே விஜேசிங்க ஆகிய எட்டு பொலிசார் இந்த வழக்கில் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்டு சித்திரவதைக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது.எதிரிகளின் சார்பில் மன்றில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகள் எதிரிகளை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என பிணை விண்ணப்பம் செய்தனர்.
சட்டமா அதிபரின் பிரதிநிதியாக நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த பிரதி மன்றாடியார் அதிபதி குமார் ரட்னம் இந்தப் பிணை விண்ணப்பத்திற்குக் கடும் ஆட்சேபணை தெரிவிப்பதாகக் கூறினார். அப்போது அவர் மேலும் கூறியதாவது:
கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் இதில் 5 எதிரிகளுக்கு எதிராகக் கொலை வழக்கு விசாரணை நடக்கின்றது. மேல் நீதிமன்றத்தில் இந்த 5 பேர் உட்பட மொத்தமாக 8 எதிரிகளுக்கு எதிராக சித்திரவதைக் குற்ற வழக்கு சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரண்டு வழக்குகளிலும் ஒன்றிலிருந்து 7 வரையிலான சாட்சிகள் சிவிலியன் சாட்சிகளாக உள்ளனர். இந்த வழக்குகளில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எதிரிகளாக உள்ளனர். இவர்களைப் பிணையில் செல்ல அனுமதித்தால் சாட்சிகளுக்கு அசசுறுத்தல் எற்படும். வழக்கு நடவடிக்கைகளில் தமலையீடு ஏற்படும் சுதந்திரமாக நீதி விசாரணை செய்ய முடியாத நிலைமை ஏற்படும்.
எனவே. இரண்டு நீதிமன்றங்களிலும் சிவில் சாட்சிகள் சாட்சியமளித்து முடியும் வரை இவர்களைப் பிணையில் விடக்கூடாது.மேலும் இதில் 5 எதிரிகள் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்து அதனைக் கைவாங்கியுள்ளார்கள்.சுன்னாகத்தில் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இளைஞனின் சடலம் கிளிநொச்சியில் கைப்பற்றப்பட்டது. சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின்பேரில், கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு (சிஐடி) கிளிநொச்சியில் கொலை வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இதனால் இந்தக் கொலை வழக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறுகின்றது.
மன்றில் ஆஜராகாத ஏழாவது எதிரி வெளிநாடொன்றில் இருப்பதால், அவருக்கு எதிராகப் பிடிவிறாந்து பிறப்பிக்க வேண்டும் என சட்டமா அதிபரின் பிரதிநிதியாக நீதிமன்றத்தில் முன்னிலையாக்யிருந்த பிரதி மன்றாடியார் அதிபதி கேட்டுக்கொண்டார். அவருடைய விண்ணப்பம் நீதிமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து எதிரிகள் தரப்பில் செய்யப்பட்ட பிணை விண்ணப்பம் நிதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டது. அத்துடன் 7 ஆவது எதிரிக்கு பிடிவிறந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருநத எதிரிகளான 7 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் டிசம்பர் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி இளஞ்செழியன் அவர்களின் பாதுகாப்பு கருதி வவனியா சிறைச்சாலையிலோ அல்லது யாழ் சிறைச்சாலையிலோ அவர்களை வைக்காமல் அனுராதபுரம் சிறைச்சாலையில் அவர்களைத் தடு;த்து வைக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தைச் சுற்றிலும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது நீதிமன்ற வளாகத்தைச் சூழ 500 மீற்றர் வரையிலும் அதிரடிப்படை பொலிசார் மற்றும் சாதாரண பொலிசார் காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஏழு பொலிசாரினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு சிறைச்சாலை அதிகாரிகளினால் அனுராதபுரம் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
Spread the love