குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு
சிறுபான்மை இனத்தவர்கள் இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுபான்மை விவகாரம் குறித்த பிரதிநிதி ரீடா இசாக் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இசாக், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்துள்ள நிலையில் பாதுகாப்புப் படைகளில் சிறுபான்மை சமூகத்தினர் உள்வாங்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது எனவும் சிறுபான்மை சமூகத்தினர் பாதுகாப்புப் படையில் அங்கம் வகிக்காமை சிறுபான்மை சமூகத்தினர் எதிர்நோக்கி வரும் மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்றாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, சிறுபான்மை சமூகத்தினர் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அனைத்து இன சமூகங்களினாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அரசியல் சாசனம் அமைய வேண்டுமெனவும் சம்பந்தன் ஐக்கிய நாடுகள் பிரதிநிதியிடம் வலியுறுத்தியுள்ளார்.
சிறுபான்மை சமூகங்களுக்கு தேசிய வாழ்வில் உரிய இடமில்லை! சம்பந்தனுக்கு ரீட்டா தெரிவிப்பு
சிறுபான்மை சமூகங்களுக்கு தேசிய வாழ்வில் உரிய இடம்கொடுக்கப்படவில்லை என்பது தெளிவாக தெரிவதாக சிறுபான்மை இன விவகாரங்களை ஆராய்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியா தெரிவித்துள்ளார். எதிர்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினரை பாராளுமன்றத்தில் உள்ள எதிர்கட்சித்தலைவரின் அலுவலகத்தில் நேற்றைய தினம் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை இராணுவத்தில் ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கையில் அதனை அடிப்படையாக கொண்டு சமாதானம், சகவாழ்வு, சம உரித்து அனைத்து மக்களுக்கும் இருப்பதாக சொல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முதற்கட்டமாக இராணுவத்தில் அமிலப் பரீட்சையொன்றை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
சிறுபான்மையினரின் பிரச்சினையே இந்நாட்டில் உள்ள அனைத்துப் பிரச்சினைக்கும் அடிப்படையாக இருப்பதாகவும் அதனை எவ்வாறு தீர்க்கலாம்? சிறுபான்மை மக்களுக்கு இடையில் என்ன சந்தேகங்கள் உள்ளன போன்ற விடயங்கள் குறித்து அவர் கேட்டறிந்து கொண்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை புதிய அரசியலமைப்பில் எல்லா மக்களும் தங்களின் இறைமையை உபயோகிக்க கூடிய வண்ணமாக பேரினவாத ஆட்சியற்றதாக புதிய அரசியலமைப்பு அமையவேண்டும் என்றும் அதற்கான பரிந்துரைகளை தாங்கள் விசேட அறிக்கையாளர் செய்யவேண்டும் என்றும் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இதன்போது கேட்டுக்கொண்டார்.