இந்தியாவில் மாறிவரும் பருவநிலை மாற்றத்தால் விவசாயம் மிக வேகமாக அழிந்து வருகிறது எனவும் அதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் உண்டாவதாகவும் நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு, மத்திய வேளாண்மை துறை அறிக்கை சமர்பித்துள்ளது.
மற்ற நாடுகளை விட இந்தியாவின் பருவநிலையில் மிகப் பெரிய மாற்றம் உண்டாகிக்கொண்டுள்ளது. குறிப்பாக, பருவநிலை மாற்றத்தால் பருவம் தப்பி மழை பெய்தல், அதீத கோடை வெயில், வறட்சி, வெள்ளம் என பல்வேறு பேரிடர்களும் உருவாகியுள்ளன.
இந்நிலையில் மத்திய வேளாண்துறை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அளித்துள்ள அறிக்கையில் 2100ஆம் ஆண்டுக்குள் விவசாய உற்பத்தி தற்போது உள்ளதை விட 40 சதவீதம் குறைந்துவிடும் என கூறியுள்ளது.
தற்போது ஏற்படும் பருவநிலை மாற்றத்தால், பத்து பில்லியன் டாலர் நஷ்டம் உண்டாவதாகவும், பருவநிலை மாற்றத்தாலும் மாறி வரும் விவசாய தொழில்நுட்பத்தை மெதுவாக உள்வாங்குவதாலும், விவசாயமே அழிந்துவிடும் நிலை ஏற்பட்டு, அதனால் மிகப் பெரிய பஞ்சத்தை இந்தியா எதிர்கொள்ளவேண்டிய சூழல் உருவாகும் என எச்சரித்துள்ளது. குறிப்பா இதேபோன்ற அணுகுமுறையைக் கையாண்டால் தற்போது உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைந்துள்ள நிலைக்கு ஆபத்து உண்டாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தால் உருளை, சோயாபீன்ஸ், வேர்க்கடலை உள்ளிட்ட சில பயிர்களின் உற்பத்தி அதிகரிக்கும் என்றும், மற்ற பயிர்களின் உற்பத்தி மிக சரிவடையும் என்றும் கூறும் அவ்வறிக்கை,
பருவநிலை மாற்றத்தால் விவசாய விளைபொருட்களின் உற்பத்தி குறையும். அதேபோல் உறபத்தி குறைவைத் தொடர்ந்து அது அனைவருக்கும் எளிதில் கிடைப்பதும் சிரமாகும். அதனால் வருமானம் அதிகம் இல்லாத ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுவர் எனவும் அவ்வறிக்கை எச்சரிக்கிறது.