குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் போராட்டங்களை முன்னேடுக்க உள்ளதாக வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
அரசியல் கைதிகள் பலர் 20 வருடங்களுக்கு மேலாக சிறைகளில் வாடுகின்றார்கள். அதில் பலர் இளவயதுகளில் கைது செய்யப்பட்டவர்கள். இவ்வாறாக சிறையில் வாடுபவர்களை ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதன் ஊடாக அவர்களை விடுதலை செய்ய முடியும். ஆனால் அதனை செய்ய ஜனாதிபதி முன்வரவில்லை.
ஜனாதிபதியை கொலை செய்ய முனைந்தவர் என குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். அது ஒரு நாடகம். சர்வதேசத்தை ஏமாற்ற போட்ட நாடகம். போர் காலத்திலும் அதன் பின்னரும் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 1979 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் பல்வேறு வகையில் துன்புறுத்தப்பட்டுச் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதுடன் தண்டனைகளும் வழங்கப்பட்டிருந்தன.
சர்வதேச ரீதியாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளப் பெறுவதாக இலங்கை அரசு வாக்குறுதியளித்த போதிலும் தற்போது வரை அதற்கான செயல் வடிவம் எதுவுமில்லை.
பயங்கரவாதத் தடைச் சட்தத்துக்கு மாற்றாகவொரு சட்டம் கொண்டு வரப் போவதாகக் கூறினார்கள். அந்தச் சட்டம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பான எந்தவொரு முடிவுகளும் வெளிப்படுத்தப்படவில்லை.
அரசியல் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் நாற்பது பேர் தண்டனை பெற்ற கைதிகளாகவுள்ளனர். அவர்களுக்கு நீதிமன்றம் மூலம் எந்தவிதமான பரிகாரமுமில்லை.
சில கைதிகள் சட்ட உதவிகள் கிடைக்காத காரணத்தால் தண்டனைகள் பெற்றுச் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜராகித் தண்டனையின் பின்னர் உயர் நீதிமன்றத்திற்குச் செல்லாமல் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.
ஒரு சில கைதிகள் உயர்நீதிமன்றம் வரை சென்றும் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதைத் தவிர மாற்று வழியில்லை. அனுராதபுரம் சிறையில் மூன்று அரசியல் கைதிகள் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவர்களுடைய வழக்குகளை வவுனியா மேல்நீதிமன்றத்திலிருந்து அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றும் முயற்சிக்கு எதிராகத் தான் அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குற்றம் சுமத்தப்பட்டுச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பலரும் 10 அல்லது 15 வருடங்களின் பின்னர் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
தண்டனை நீடிக்கப்படாமலேயே பழிவாங்கும் நோக்கில் அவர்கள் தொடர்ந்தும் தண்டனைக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். தமிழ் அரசியல் கைதிகள் மாத்திரமல்லாமல் சில முஸ்லிம் அரசியல் கைதிகளும், சில சிங்கள அரசியல் கைதிகளும் கூடத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு வழங்கப்பட வேண்டும். இல்லாவிடில் கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் நில மீட்புக்கான போராட்டங்களுக்கு மேலதிகமாக தமிழ் அரசியல் கைதிகளுடைய விடுதலையை வலியுறுத்தும் போராட்டங்களையும் நாங்கள் வடக்கு, கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் தீவிரமாக முன்னெடுப்போம் என மேலும் தெரிவித்தார்.