குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த யாழ்.பல்கலைகழக மாணவனான விஜயகுமார் சுலக்சனின் குடும்பத்தினருக்கு கையளிப்பதற்காக வீடு நிர்மாணிக்கும் பொருட்டு இன்றைய தினம் அடிக்கல் நாட்டபட்டது.
மீள் குடியேற்ற அமைச்சின் நிதியுதவியில் குறித்த வீடு அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. குறித்த நிகழ்வில் மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
குறித்த வீடு உயிரிழந்த மாணவனின் சொந்த ஊரான சண்டிலிப்பாய் மாசியாப்பிட்டி பகுதியில் மீள் குடியேற்ற அமைச்சின் நிதியில் காணி கொள்வனவு செய்தே வீடமைத்து கொடுக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டு உள்ளது.
குறித்த வீட்டினை இராணுவத்தினரே அமைத்து கொடுக்க வுள்ளதாக மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார.
மேலும் தெரிவிக்கையில் , புதிய வீட்டுக்கு அடிக்கல் நாட்டி உள்ளோம் இன்னும் இரு மாதங்களில் வீடு முழுமையாக நிர்மாணிக்கப்பட்டு , கையளிக்கப்படும். மற்றைய மாணவனான கஜனின் பெற்றோர்களுக்கும் கிளிநொச்சியில் மிக விரைவில் வீடு நிர்மாணிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்க உள்ளோம்.
தனியார் ஒப்பந்த காரர்களிடம் இந்த வீட்டினை நிர்மாணிக்க கொடுத்தால் 25 இலட்சம் ரூபாய் செலவழியும். ஆனால் இந்த வீட்டினை நிர்மாணிக்கும் பணிகளை இராணுவத்தினர் மேற்கொள்வதனால் செலவு மிக குறைவாக முடிவடையும் என எதிர்ப்பார்க்கின்றோம். இன்னமும் இராணுவத்தினர் செலவு விபரத்தினை கையளிக்க வில்லை. கையளித்த பின்னரே செலவு குறித்து கூற முடியும்.
இந்த வீட்டினை அமைப்பதற்கான காணியினை கூட மீள் குடியேற்ற அமைச்சினால் தான் கொள்வனவு செய்து கொடுத்துள்ளோம். என தெரிவித்தார்.
யாழ்.குளப்பிட்டி சந்திப்பகுதியில் யாழ்.பொலிஸ் நிலையத்தை சேர்ந்த போலீசார் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி நள்ளிரவு மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் யாழ்.பல்கலைகழக மாணவர்களான விஜயகுமார் சுலக்சன் மற்றும் நடராஜா கஜன் ஆகிய இரு மாணவர்கள் உயிரிழந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.