ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 26 வருடமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் இன்று பரோலில் விடுவிக்கப்பட்டு ஜோலார்ப்பேட்டையில் உள்ள வீடு சென்றுள்ளார்.
பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட அவரை வரவேற்க அவரது வீட்டுப் பகுதியில் பெரும் திரளாக மக்கள் காத்திருந்தனர். 26 வருடங்களுக்குப் பின்னர் வரும் பேரறிவாளனின் வருகை அப்பகுதியை உணர்ச்சிப்பூர்வமாக மாற்றியிருந்தது.
பேரறிவாளனின் பெற்றோர் ஞானசேகரன் – அற்புதம் அம்மாள், சகோதரி அன்புமணி உள்ளிட்டோர் நெகிழ்ச்சியுடன் காத்திருந்து தங்களது பிள்ளையை கண்ணீருடன் வரவேற்றனர்.
26 ஆண்டுகாலம் சிறையில் கழித்த மகன் முதன் முறையாக பாரோலில் வந்ததை அடுத்து உணர்ச்சி பெருக்கோடு காணப்பட்டார் அற்புதம்மாள். பேரறிவாளனுக்கு உறவினர்கள் ஆரத்தி எடுத்து உச்சி மோர்ந்து வரவேற்றனர். கால் நூற்றாண்டு கழித்து பெற்றோருடன் சாப்பிட்டு உறங்கப் போகிறார் பேரறிவாளன்.
ஒருமாதகாலம் பரோலில் விடுதலையான பேரறிவாளன் தினசரி ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் சிறையில் கொடுத்துள்ள முகவரியில்தான் தங்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.பொதுக்கூட்டங்களில் பேசக்கூடாது, ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
பேரறிவாளனுக்கு ஒரு மாத கால பரோல் வழங்கப்பட்டுள்ளது
Aug 24, 2017 @ 14:32
இந்திய முன்னாள பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பில் 26 ஆண்டு காலம் தண்டனை பெற்று வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாத காலம் தமிழக அரசு பரோல் அளித்துள்ளது.
இதற்கான அரசாணை வேலூர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிசந்திரன் ஆகிய 7 பேருக்கும் முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர்கள் வேலூர், புழல் உள்ளிட்ட சிறைகளில் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளனர்.
தற்போது பேரறிவாளனின் தந்தைக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் அவரை பரோலில் அனுப்ப வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தநிலையில் பேரறிவாளனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு வேலூர் சிறைச்சாலைக்கு அனுப்பியுள்ளது.
அதேவேளை தனது மகன் வீட்டு வாசலில் காலடி வைக்கும் வரை இந்த உத்தரவை நம்ப முடியாது என பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.