குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இரட்டை பிரஜாவுரிமை விவகாரத்தில் சிக்கியுள்ள அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து ஓக்டோபர் மாத நடுப்பகுதியிலேயே விசாரணைகள் ஆரம்பமாகும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து அடுத்த இரண்டு மாத காலப்பகுதிக்கு அவுஸ்திரேலியாவில் இந்த சர்ச்சை நீடிக்கும் நிலை உருவாகியுள்ளது.
மல்கம் டேர்ன்புல் அரசாங்கம் சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்த விவகாரம் குறித்த பதிலை வழங்குவதை துரிதப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையிலேயே நீதிமன்றம் ஓக்டோபர் 11 ம் திகதி வரை விசாரணைகளை ஆரம்பிக்கப்போவதில்லை என இன்று தெரிவித்துள்ளது.
இந்த தாமதம் காரணமாக மல்கம் டேர்ன்புலிற்கான ஆதரவு மேலும் குறைவடையலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.மல்கம் டேர்ன்புலிற்கான ஆதரவு குறைவடைவதால் தலைமைத்துவ மாற்றம் குறித்த சவால்கள் உருவாகலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டேர்ன்புல் தனது அரசாங்கத்தின் நம்பிக்கைதன்மை குறித்த சந்தேகத்தை உடனடியாக போக்கவேண்டியிருக்கும் என ஆய்வாளர் ஓருவர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் ஏழு உறுப்பினர்கள் இரட்டை பிரஜாவுரிமை சர்ச்சையில் சிக்குண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர்களில் பிரதி பிரதமரும் இரு அமைச்சர்களும் உள்ளனர்.இவர்கள் இரட்டை பிரஜாவுரிமைக்கு உரித்தானவர்கள் என அறிவிக்கப்பட்டால் அவர்கள் நாடாளுமன் உறுப்புரிமையை இழக்கவேண்டியிருக்கும்.