டோக்லாம் பகுதியில் இருந்து படைகளை திரும்ப பெற இந்தியா-சீனா ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியா, பூடான், சீனா நாடுகளின் முச்சந்திப்பில் சிக்கிம் எல்லையில் டோக்லாம் பகுதியில் வீதி அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டமைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த பகுதியில் இந்தியா அமைத்திருந்த 2 பதுங்கு குழிகளை சீன ராணுவம் அகற்றியது.
இதையடுத்து, டோக்லாமில் ராணுவத்தை இந்தியா குவித்துள்ளநிலையில் தனது எல்லையில் இந்திய ராணுவம் ஆக்கிரமித்து இருப்பதாக கூறி சீனாவும் அப்பகுதியில் படைகளை குவித்துள்ளதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வந்தது.
இந்நிலையில், குறித்த பகுதியில இருந்து படைகளை திரும்ப பெற இஇரு நாடுகளும் ஒப்புதலளித்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சனை தொடர்பாக இந்திய மற்றும் சீன தூதரக அதிகாரிகள் இடையே கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையினையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதாற்காக பிரதமர் இந்திய நரேந்திர மோடி நாளை சீனா செல்ல உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.